Friday, September 20, 2013

Vikatan Review


Vikatan Review..முட்டாள் திருடர்கள் கூடினால்... அது 'மூடர்கூடம்!’
வேலை இல்லாத, அடுத்த வேளை உணவுக்கு வழி இல்லாத நான்கு 'திடீர் நண்பர்கள்’ முதல் முறையாகக் கொள்ளையடிக்கச் சென்றபோது, என்ன நடந்தது என்பதே கதை!
தமிழில் மிக அரிதான 'ப்ளாக் ஹியூமர்’ சினிமாவை தன் அறிமுகப் படைப்பாக இயக்கி, அதில் ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சிந்திக்கவைக்கும் சிரிப்பு வசனங்களைப் புதைத்து அட்டகாசப் படுத்திய இயக்குநர் நவீன், 'நம்பிக்கை இயக்குநர்கள்’ பட்டியலில் இடம் பிடிக்கிறார்!
சார்லி சாப்ளினின் மௌனப் படப் பாணி கதை சொல்லல், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் அதன் பிரத்யேக இயல்பை வைத்தே ஈர்க்கச்செய்தது, நாய்க்கும் பொம்மைக்கும்கூட 'முன்கதைச் சுருக்கம்’ வைத்தது, தீவிர நாடக பாணியை சிரிப்பு சினிமாவில் சேர்த்தது, 'இன்னார் ஹீரோ... இன்னார் வில்லன்’ என்று சொல்ல முடியாமல் ஒவ்வொருவர் மீதும் கதையின் கனத்தை ஏற்றியது, தன்னைக் கடத்தியவன் மீதே கனிவுகொள்ளும் 'ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோம்’ விளைவை ஓர் அறியாப் பருவ சிறுமி மனதில் விதைத்தது... கலகலக் கலக்கல் மூடர் படை!

நான்கு மூடர்களில் அதிகம் கவர்கிறார் சென்றாயன். தனக்கிடப்பட்ட ஒவ்வொரு அசைன்மென்ட்டையும் சொதப்பிவிட்டு கெத்துப் பார்வை காட்டுவதும், ஓவியாவிடம் உருகி வழிவதுமாக தியேட்டரை அதிர வைக்கிறார். புத்திசாலி முட்டாளாக இயக்குநர் நவீன். திருட்டு அசைன்மென்ட்டில் ஆரம்பம் முதலே நண்பர்கள் சொதப்ப, கோபத்தை அடக்கிக்கொண்டு, 'அப்ப ட்ரை பண்ணுங்க சென்றாயன்... எடுத்தவுடனே தெரியாதுனு சொல்லாதீங்க’ என்று லாஜிக் வகுப்பு எடுக்கும் இடங்களில் ஜொலிக்கிறார்.
வினோதமான ரப்பர் உடையுடன், 'காரணம் உணர்வுப்பூர்வமா இருந்தா, எவ்வளவு சின்ன வேலையா இருந்தாலும் செய்வேன். ஏன்னா, இதுவும் என் ஜாப் எத்திக்ஸ்’ எனும் பாபி தேஜாய், 'என்னைப் பார்த்தா ஒரு சாயல்ல ரஜினி மாதிரி இருக்கு... இன்னொரு சாயல்ல கமல் மாதிரி இருக்கு... ஏதாவது ஒரு சாயல்ல முட்டாள் மாதிரி இருக்கா?’ என்று 'தமிழ் பேசும்’ வட இந்திய தாதா, 'அப்பா குளிச்சுட்டு இருக்காங்க... நீங்க வரும்போது எனக்கு ஐஸ்க்ரீம், சாக்லேட், பூரி... அப்புறம்...’ என்று போனில் குழையும் குழந்தை ரிந்தியா சிவபாலன், அத்தனை பேரையும் அதட்டும் நவீனையே, பதறச்செய்யும் 'திடுக்’ பார்வைகளை வீசும் மானசா மது, 'என்னை நம்பிக் குடுத்த முதல் பொறுப்பு இது. நான் இதை ஒழுங்கா முடிக்கணும்’ என்று சூளுரைக்கும் சதீஷ், ஏக உதார்விட்டு பிறகு உச்சாவிடும் ஆட்டோ குமார் சஞ்சீவி என ஒவ்வொரு கதாபாத்திரமும் செம!
'என்னது, சின்னக் கஞ்சாப் பொட்டலம் 400 ரூபாயா? இந்த நாட்டுல இதைத் தட்டிக்கேக்க யாருமே இல்லையா?’,'எடுக்கிறவன் மட்டுமில்லை... எடுக்கவிடாமத் தடுக்கிறவனும் திருடன் தான்’, 'தமிழ் தெரியாத இங்கிலீஷ்காரன்கிட்ட தமிழ்ல பேசக் கூடாதுன்னு தெரிஞ்ச உனக்கு, இங்கிலீஷ் தெரியாத பச்சைத் தமிழன்கிட்ட இங்கிலீஷ் பேசக் கூடாதுன்னு ஏன்டா தெரியலை?’, 'மொழிப்பற்று நல்ல விஷயம்தான். ஆனா, அதைப் பத்திப் பேச இதுவா நேரம்?’, 'ஒண்ணுக்கைக்கூட கன்ட்ரோல் பண்ணத் தெரியாதவன், ஒரு ஏரியாவையே எப்படிடா கன்ட்ரோல் பண்ணுவான்?’, 'சுடுறதுக்குத்தான்டா துப்பாக்கி வேணும். சுட மாட்டேன்னு சொல்றதுக்குக்கூடவா துப்பாக்கி வேணும்?’, 'இப்போ உங்களை யாரும் ஹீரோன்னு சொன்னாங்களா பாஸ்?’, 'வழி நம்ம முன்னாடிதான் இருக்கு... நாமதான் நடக்கணும்!’ - ஒரே வரியில் சிரிக்கவைத்தாலும், பல இடங்களில் பளிச் சிந்தனைகளைப் புதைத்திருக்கும் நவீனின் வசனமே படத்தின் நாயகன்!

ஜெயப்பிரகாஷின் மகன் அடிவாங்குவதை காமெடியாக்கி, சட்டென ஒரு திருப்பத்தில் அவன் மேல் பரிதாபம் கொள்ளச் செய்யும் அத்தியாயம், மாயக் கிளியில் புதைந்திருக்கும் அரக்கனின் உயிர் போல, தட்டிக்கொண்டிருக்கும் பந்தில் ஒளிந்திருக்கும் வாழ்க்கை, சர்க்கரை நோயாளி அடியாள், ஏழை - பணக்காரன் வித்தியாசத்தின் ஊற்றுக்கண் எனப் போகிறபோக்கில் பல கதைகள் பேசிச் செல்கிறது திரைக்கதை!
ஒவ்வொரு 'முன்கதைச் சுருக்கமும்’ சுவாரஸ்யம்தான். ஆனால், அதற்காக கடைசிக் காட்சி வரை அவற்றை அடுக்கிக்கொண்டே இருக்க வேண்டுமா? 'நியூ லைன் சினிமா’ முயற்சியில், 'சிக்-கிக்’ ஓவியா கதாபாத்திரம்... கமர்ஷியல் திணிப்பு.
ஒரே கூடத்தில் நடக்கும் கதையை உற்சாகமாகக் கண்களுக்குக் கடத்துகிறது டோனி சானின் ஒளிப்பதிவு. நடராஜன் சங்கரனின் பின்னணி இசை, பெட்டர் ஸ்கோர்!
படத்தின் இறுதி வரை கோலிவுட் இலக்கணத்தில் சிக்காமல் பயணிக்கும் படம், கடைசியில் ஆபரேஷனுக்கு உதவி, பொம்மையில் வைரம் எனப் பழகிய பாதைக்கே திரும்புகிறது.
தன் அழுக்குச் சட்டையைக்கூட கழற்றிக் கொடுக்கும் எளிய மனிதர்களின் அன்பைப் பேசுவதில் டிஸ்டிங்ஷனில் தேர்வாகிறார்கள் மூடர்கள்!

vikatan...

No comments:

Post a Comment