Tuesday, October 29, 2013

தீபாவளி லேகியம்

மாயவரத்தான்.... @mayavarathaan


29th October 2013 from TwitLonger
தீபாவளிக்கும் நாற்பது, ஐம்பது நாட்களுக்கு முன்னரே தீபாவளி பரபரப்பு தொற்றிக் கொண்டு விடும்.

தீபாவளி லேகியம், தீபாவளிப் பட்டாசு, தீபாவளி புது ட்ரஸ், தீபாவளி ஸ்வீட், தீபாவளி மலர், தீபாவளி ரிலீஸ் படம் வரிசையில் தீபாவளி வாழ்த்து அட்டை முக்கிய இடம்.

ஆரம்ப காலங்களில் பொங்கலுக்கு மட்டுமே இருந்து வந்த இந்த வாழ்த்து அட்டை அனுப்பும் பழக்கம் வியாபாரிகளால் தீபாவளிக்கும் கடைவிரிக்கப்பட்டது.

ரஜினி, கமல்ஹாசன் படம் போட்ட வாழ்த்து அட்டைகளுக்கு எப்பவுமே டிமாண்ட். அதே போல பிரித்தால் ‘ஙொய்ய்ய்ய்ய்ங்..ஙொய்ய்ய்ய்ய்ங்..’ என்று சப்தமெழுப்பும் வாழ்த்து அட்டைகள் அந்தக் காலத்தில் உலக அதிசயம். 

ஒட்டு மொத்தமாக வாழ்த்து அட்டைகள் வாங்கி அவற்றில் முகவரி எழுதி, தபால் தலை ஒட்டி அஞ்சலில் அனுப்புவது படு பயங்கர வேலை. அஞ்சலகங்கள் ஓவர் டைமில் செயல்படும் காலங்கள். வாழ்த்து அட்டைகளை டெலிவரி செய்ய முடியாமல் கால்வாய்களில் தூக்கியெறிந்து மாட்டி தர்ம அடி வாங்கிய போஸ்ட்மேன்கள் உண்டு.

ஆரம்ப காலங்களில் தீபாவளி பூஜையில் ஆனந்த விகடன் தீபாவளி மலரையெல்லாம் வைத்து பூஜித்த குடும்பங்களையெல்லாம் கூட நான் பார்த்திருக்கிறேன். கல்கி, அமுதசுரபி போன்றவையெல்லாமும் அதே போல தலையணை சைஸ் தீபாவளி மலர்களை ரிலீஸ் செய்தன.

தினமலர் தீபாவளி மலர் பிஸினசில் குதித்த பிறகு அப்படியே ட்ரெண்டு மாறி விட்டது. அதனுடன் கொடுக்கும் ரஜினி & கமல்ஹாசன் முழு நீள ப்ளோ-அப் புகைப்படங்களுக்காகவே பரபரப்பான விற்பனை.

”கமல்ஹாசன் ஃபோட்டோ மட்டும் சூப்பரா போட்டுட்டான். நம்மாளு ஃபோட்டோவை சொதப்பிட்டான் பாரு. எப்படியிருந்தாலும் நாமெல்லாம் வாங்கிடுவோமுன்னு தான் இப்படி பண்றான் வருஷா வருஷம்” என்று ரஜினி ரசிகர்களும், அதையே அப்படியே உல்டாவாக கமல் ரசிகர்களும் பேசிக் கொள்வது வருடா வருடம் வழக்கம் தான்.

அதன்பிறகு சன் டிவி தினகரன் இதழை வாங்கி தீபாவளி மலரை ஆரம்பித்த பிறகு தான் நூறு ரூபாய் புத்தகத்துடன் நானூறு ரூபாய் ஃப்ரீ கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது. அப்போதெல்லாம் நிறையக் கடைகளில் புத்தகமே கிடைக்காது. என்னவென்று பார்த்தால் புத்தகத்தை எடைக்கு எடை போட்டு விட்டு இலவசப் பொருட்களை பிரித்து விற்பனை செய்ய ஆரம்பித்திருந்தார்கள் என்ற விஷயம் தெரிய வந்தது. இப்போது அப்படி இலவசங்களை அள்ளிக் கொடுக்க தடை என்று கேள்வி. ஆனாலும் இந்த ஆண்டு தினகரன் தீபாவளி மலருடன் ஒரு சில இலவசப் பொருட்கள் கொடுக்கத் தான் செய்கிறார்கள். தினமலர் தீபாவளி மலர் வருகிறதா என்று தெரியவில்லை. அமுதசுரபி, விகடன், கல்கி, தி இந்தி தமிழ் என்று ‘மொத்த சைஸ்’ தீபாவளி மலர்கள் வந்திருந்தாலும் எதுவுமே சுவாரசியமாக இல்லை என்பது தான் உண்மை.

ஒரு மாதம் முன்னரே துணி எடுத்துக் கொடுத்தாலும் தீபாவளிக்கும் முதல் நாள் நள்ளிரவு அவசர அவசரமாக தைத்துக் கொடுக்கும் சட்டையில் ஒரு பக்கம் கை தூக்கியோ, பேண்ட் இடுப்பில் நிற்காமல் லூஸாகவோ இருந்து, ஒட்டு மொத்த ஊராரின் சாபமும் வாங்காத தையல்காரர்கள் யாரும் உண்டா என்ன? ஊரில் எந்த டைலரிடம் நாம் பேண்ட், சட்டை தைத்தோம் என்பதை வைத்தே நமது சோஷியல் ஸ்டேட்டஸ் எடை போடப்படும். “ஓ.. மேப்ஸ் டைலர்கிட்டயா? நான் இப்போவெல்லாம் அங்கே தைக்கிறதில்ல.. அங்கேர்ந்து முக்கியமான ஆளெல்லாம் பிரிஞ்சு எழுத்தாப்லேயே கடை போட்டிருக்காங்க. ரொம்ப ரொம்ப வி.ஐ.பி.ங்களுக்கு மட்டும் தான் தெச்சுக் கொடுக்குறாங்க. அங்க தான் நான் தெச்சுக்கிட்டேன்” என்ற பீலா விடுதல்களும் உண்டு. அந்த ‘முக்கியமான’ டைலர்கள் தான் முந்தைய தீபாவளிகளில் நம்முடைய சட்டையை மேலும் கீழுமாக கோணல் மானலாக தைத்துக் கொடுத்து வயிற்றெரிச்சலை கொட்டியிருந்திருப்பார்கள்.

பட்டாசுக் கடைகளில் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பே பட்டாசு வாங்கி அவற்றை மொட்டை மாடியில் வெயிலில் காய வைத்து தீபாவளியன்று காலையில் எண்ணை தேய்த்து குளித்த கையோடு வெடிப்பது ஒரு கூட்டமென்றால், தீபாவளிக்கும் முதல் நாள் நள்ளிரவு பட்டாசுக் கடைகளில் மீந்து போன பட்டாசுகளை ‘ஜப்தி ரேட்’டில் ஏலத்துக்கு எடுத்து வாங்கி வந்து காலையில் அவற்றை வெடித்து மகிழ்வோரும் உண்டு. என்னவோ காய வைக்காத வெடி நமத்துப் போன பட்டாசாக சவுண்டு தரும் என்ற நம்பிக்கையின் காரணமாக, ஏலத்தில் வாங்கிய வெடிகளை தட்டில் வைத்து விறகு அடுப்பில் காய வைத்து அதில் நெருப்புப் பொறி பட்டு வீட்டின் சமையலறையினுள்ளேயே ‘ஏர் ஷிப்’, ‘ராக்கெட்’, சடபுடா எனும் சரமெல்லாம் வெடித்து சிதறிய கதையெல்லாம் உண்டு.

தீபாவளி வெடிகளெல்லாம் வெடித்துத் தீர்த்த பிறகு யார் வீட்டு வாசலில் வெடிக் குப்பைகள் குவிந்திருக்கிறது என்று ஊர் முழுதும் போய் கணக்கெடுத்து வருவதெல்லாமும் நடக்கும். வெடிகள் அனைத்தும் தீர்ந்த பிறகு ஏற்கனவே வெடிக்காமல் போன நமத்துப் போன பட்டாசுகளை தேடியெடுத்துப் பிரித்து வெடி மருந்துகளைக் குவித்து ‘புஸ்ஸ்ஸ்ஸ்வானம்’ விட்டு மகிழ்வது தனிக் கலை.

அடுத்து தீபாவளி ரிலீஸ் திரைப்படம்.. அடித்துப் பிடித்து முதல் நாளே படம் பார்ப்பதிலும்.. அதுவும் புது டிரஸ்களைப் போட்டுக் கொண்டு படம் பார்ப்பது ஒரு சுகம் தான்.

படம் பார்க்கப் போகாதவர்கள் மதியம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகும் ‘சிறப்பு ஒளியும் ஒலியும்’, ‘சிறப்பு திரைக் கண்ணோட்டம்’ ஆகியவற்றுடன் அதற்கும் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ரிலீஸாகியிருந்த எதாவது ஒரு திரைப்படம் பார்ப்பதும் சுவாரசியமான விஷயங்கள். தென் தமிழ்நாடுப் பகுதிகளில் இருப்பவர்களுக்கு மாலை வேலைகளில் அதிர்ஷ்டமிருந்தால் ‘ரூபவாஹினி’ மூலம் எதுவும் புதிய நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிட்டும்.

‘உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக... திரைக்கு வந்து சில நிமிடங்களே ஆன....’ என்று என்றைக்கு ஆரம்பித்தார்களோ.. அன்றைக்கே தீபாவளியும் மற்றோரு ‘விடுமுறை தினம்’ தான் என்றாகி விட்டது.

No comments:

Post a Comment