Thursday, June 20, 2013
மடிப்பாக்கத்தில்
கடந்த சில வாரங்களாக மடிப்பாக்கத்தில் அடிக்கடி இரவுநேர மின்வெட்டு. அதிலும் பதினொன்றரை, பன்னிரெண்டரை என்று ஏடாகூடமான டைமிங்கில் கெடா வெட்டுகிறார்கள். மின்வாரியத்துக்கு போன் செய்தால் ’லைன்’ கிடைக்காது. கிடைத்தாலும் ஒரே ரெடிமேட் பதில்தான். “பத்தே நிமிஷத்துலே வந்துடும் சார்”. குழந்தைகளுக்கு விசிறி விசிறி கையே மரத்துவிடும். “சும்மாதானே கெடக்குறீங்க. ஒரு எட்டு கரெண்டு ஆபிஸுக்கு போயிட்டு வரலாமில்லே?” என்று அப்படியும் வீட்டில் சித்திரவதை செய்வார்கள். தெருநாய்கள் கண்ணில் படாமல் அகாலவேளையில் மின்வாரிய அலுவலகத்துக்கு சென்றால் வாசலில் ஒரு போலிஸ்காரர் ஸ்டூல் போட்டு உட்கார்ந்திருப்பார். “போலிஸ் ஸ்டேஷனிலேயே கரெண்ட் இல்லப்பா...” என்பார்.
வீட்டிலிருந்து விரட்டப்பட்ட நம்மை மாதிரி நான்கைந்து பேர் என்கொயரி டேபிள் வாசலில் தேவுடு காத்துக் கொண்டிருப்பார்கள். ஓரிருவர் லேசாக ‘மருந்து’ போட்டு ரவுசு விட்டுக் கொண்டிருப்பார்கள். மின்வாரிய ஊழியர்கள் ‘டேப்’ போட்டது மாதிரி ஒரே பதிலைதான் திரும்பத் திரும்ப சொல்கிறார்கள். “சிஸ்டம் எல்லாமே ஆட்டோமேடிக்கு சார். நைட்லே எல்லா வூட்லேயும் ஏசி போட்டுடறாங்களா... ஆட்டோமேடிக்கா ட்ரிப் ஆவுது. நாங்க என்னா பண்ணுறது? அவங்க எவ்ளோ கரெண்டு உடறாங்களோ, அதை அப்படியேதான் சப்ளை பண்ணுறோம்”
நேற்று நைட் தூக்கம் வராமல் ‘மித்ருடு’ என்கிற பாலகிருஷ்ணாவின் படத்தை ஜெமினி டிவியில் பார்த்துக் கொண்டிருந்தேன். சிங்கப்பூரில் சைனீஸ் வில்லன்களை குங்ஃபூ ஃபைட் போட்டு துரத்தி அடித்துக் கொண்டிருந்தார் பாலய்யா. ப்ரியாமணி - பாலகிருஷ்ணா என்று ஒருமாதிரி வாழைப்பழத்தை மிளகாய்த்தூளில் தொட்டுக்கொண்டு சாப்பிடறமாதிரி ஜோடி. ஏதோ சூழ்ச்சி செய்து பாலகிருஷ்ணாவை திருமணம் செய்துக் கொள்கிறார் பிரியாமணி. அது என்ன சூழ்ச்சி என்கிற சஸ்பென்ஸ் அகலுவதற்குள் கரெண்ட் கட்.
பத்து நிமிடத்தில் வந்துவிடும், இருபது நிமிடத்தில் வந்துவிடும் என்று மூடநம்பிக்கையில் ஆழ்ந்து போனும் செய்யவில்லை. நேராகவும் போகவில்லை. குழந்தைகள் வேறு சிணுங்கிக்கொண்டே இருக்க பயங்கர கடுப்பாக இருந்தேன். பாப்பாக்களுக்கு விசிறிக்கொண்டே போனில் கம்ப்ளையண்ட் செக்ஷன் ட்ரை செய்துக்கொண்டிருக்க ’நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தற்போது வேறொரு அழைப்பில் பிஸியாக இருப்பதால்...’
ஒரு வழியாக பண்ணிரெண்டரை மணிக்கு ‘லைன்’ கிடைத்தது.
“நண்பா. கரெண்டு எப்ப வரும்?”
“அஞ்சு நிமிஷத்திலே வந்துடும் சார்”
“உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சா?”
“ஆவலை சார். எதுக்கு கேட்கறீங்க?”
“வயிறெரிஞ்சி சொல்றேன். உங்க பர்ஸ்ட் நைட் அன்னிக்கு நைட் ஃபுல்லா கரெண்ட் கட் ஆயிடும் பாஸ்”
சாபம் விட்டு விட்டு போனை கட் செய்தேன். அதிசயம் ஆனால் உண்மை. அடுத்த சில நொடிகளிலேயே கரெண்ட் வந்துவிட்டது.
http://tl.gd/n_1rku2f5
லக்கிப்பீடியா @luckykrishna
20th June 2013 from TwitLonger
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment