Wednesday, April 9, 2014

ஈழ இறுதி யுத்தம்

சி.சரவணகார்த்திகேயன் @writercsk 9th April 2014 from TwitLonger @RajanLeaks உங்கள் கருத்துக்கள் (தமிழ் ட்விட்டர் உலகில் இயங்கும் பெரும்பாலானோரைப் போல) மேலோட்டமாக விளையாட்டுத்தனமானவை என்றாலும் கணிசமான சந்தர்ப்பங்களில் அவற்றின் உட்பொருள் சம்மந்தப்பட்ட விஷயம் குறித்த ஆழ்ந்த மற்றும் நீண்டகால புரிதலுடன் தான் வெளிப்படுகிறது என்பதாலும் அதன் நீட்சியாய் ட்விட்டரில் நான் மதிக்கும் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களுள் ஒருவர் நீங்கள் என்பதாலும் என் மோடி எதிர்ப்பின் உள்நோக்கம் பற்றிய உங்கள் ஸ்டேட்மெண்டுக்கு நான் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன். ஈழ இறுதி யுத்தம் பற்றி ஏன் எழுதவில்லை? முதல் விஷயம் ஓர் எழுத்தாளனாய் நான் எல்லா விஷயங்கள் குறித்தும் எழுத வேண்டும் என்பதோ அதன் மூலம் என் நடுநிலைமைக் கற்பை நிரூபிக்க வேண்டும் என்றோ அவசியமே இல்லை. அது எவ்வளவு முக்கியமான சமகாலச் சம்பவமாக இருந்தாலும் இது தான் என் கருத்து. நான் நேசிக்கும் எந்த எழுத்தாளனையும் ஏன் இந்த விஷயம் பற்றி எழுதவில்லை என நினைத்ததே இல்லை. மாறாக அவர் எழுதியதே எனக்கு முக்கியம். ஒருவர் ஒரு விஷயம் குறித்து எழுதாமல் இருக்க உள்நோக்கம் என்பது கடந்து பல இயல்பான காரணங்கள் இருக்க முடியும் என்கிற என் புரிதலே எனது இந்த எதிர்ப்பார்ப்பினமைக்குக் காரணம். ஈழ யுத்தம் பற்றி நான் எழுதாமல் போனதற்கு கீழ்க்கண்ட காரணங்களைச் சொல்ல முடியும்: 1) அப்போது (இப்போதும் கூட) எனக்கு ஈழப் போராட்டம் குறித்த விரிவான அறிவோ புரிதலோ இல்லை. இங்கே இருக்கும் மற்றவர்கள் போல் அல்லாமல் நான் ஒருபோதும் எனக்குத் தெரியாத விஷயங்கள் குறித்து எழுதுவதில்லை. நான் படித்த வரையில் (பிரபாகரன் மீதிருக்கும் ஹீரோயிஸ அபிமானம் தாண்டி) எனக்கு விடுதலைப் புலிகளின் மீது விமர்சனங்கள் உண்டு. நான் எழுதினால் அதையும் சேர்த்தே எழுத விரும்புவேன். இப்போதும் அந்த அடிப்படையில் தான் காங்கிரஸையும் குப்பை என்கிறேன், மோடியின் சில சாதனைகளை ஏற்கிறேன். இதே அடிப்படையில் தான் நீங்கள் சிறை சென்ற சமயம் (அவ்விஷயத்தில் நான் சின்மயி தான் தவறிழைத்தவர் என்று வலுவாக உணர்ந்ததைத் தாண்டி உங்கள் மீதும், உங்களுக்குக் கண்மூடித்தனமாய் ஆதரவாய்ப் பேசியவர்கள் மீதும் எனக்கு விமர்சனம் இருந்ததால்) என் சொந்தக் கருத்துக்கள் எதையும் கூறாமல் அதில் நான் நம்பும் விஷயங்கள் பற்றி அதற்கு நெருக்கமான விதத்தில் அச்சமயம் எழுதப்பட்ட அத்தனை பதிவுகளையும் தேடி வாசித்துப் பகிர்ந்தேன். அதன் தர்க்கம் ஒன்று தான்: ஒரு விஷயத்தில் நியாயம் இருக்கும் பக்கம் சில சிறுதவறுகளும் இருக்கும் போது நடுநிலைமை என்ற பெயரில் அந்தத் தவறுகளைப் பேசுகிறேன் பேர்வழி என்று செய்யாமல் வாயை மூடிக் கொண்டிருப்பதே அந்தத் தரப்பிற்குச் செய்யும் மிகப் பெரிய உபகாரம் என நம்புகிறேன். அது ஒருவகையில் கள்ளமௌனம் தான். ஆனால் நேர்மறையான கள்ளமௌனம். 2) 2009ல் எனக்கு வலைத்தளம் தவிர எழுத வேறு இடங்கள் இல்லை. புத்தகம் எழுதவில்லை, இதழ்களில் எழுதவில்லை, ட்விட்டர் கூட வரவில்லை. அதனால் அப்போது பொதுவாகவே அரசியல் எழுதியது குறைவு தான். என் வலைதளத்திற்கும் வாசகர் எண்ணிக்கை குறைவு தான் (சமூக வலைதளங்களின் வரவால் இப்போதும் கூட அதில் பெரிய மாற்றம் ஏதும் இல்லை). அதனால் எழுதி என்ன ஆகப் போகிறது என ஈழப் போராட்டம் பற்றி விரிவாய் படிக்கும் / எழுதும் உந்துதல் ஏற்படவில்லை. ஒரு கவிதை அல்லது ஒரு சிறுகதை போன்ற படைப்பிலக்கியங்கள் எத்தனை பேரை அடைகிறது என்பது குறித்து எனக்கு ஆரம்பத்தில் கூடக் கவலை இருந்ததில்லை. நான் எழுதி முடித்ததுமே திருப்தி வந்து விடுகிறது. பிறகு வரும் பாராட்டுகள் யாவும் போனஸ் தான். ஆனால் ஓர் அரசியல் கட்டுரை என்பது வாசகனை முதன்மையாகக் கொண்டது என நினைக்கிறேன். அவனுக்குப் போய்ச் சேர்ந்தால் தான் அதன் நோக்கம் நிறைவடைகிறது. அதனால் தான் எழுதவில்லை. 3) ட்விட்டர் வந்த பிறகும் சில சந்தர்ப்பங்களில் ஈழ யுத்தம் பற்றிய பேச்சுகள் அவ்வப்போது அதிகம் நடந்தன (அவற்றை விவாதம் எனச் சொல்ல மாட்டேன்). ஆனால் அவை பெரும்பாலும் உணர்ச்சிவசப்பட்ட அல்லது போலித்தனமான ஒன்லைனர்களாகவும் தங்களை புரட்சிக்காரன் என்று காட்டிக்கொள்ளும் முயற்சிகளாகவுமே இருந்தன. இணையத்தில் அரைகுறைப் பெண்ணியம் பேசுபவர்களுக்கும் இதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அவர்களோடு இணைத்து நான் அடையாளம் காணப்பட நான் விரும்பவில்லை. அதனால் அவை யாவற்றையும் மௌனமாகவே கடந்தேன். அப்படிச் செய்பவர்களிடம் இப்போதும் கூட தள்ளியே இருக்கிறேன். 4) ஈழப் போர் அல்லது அதன் பிந்தைய மாற்றங்கள் குறித்து இங்கே ட்விட்டரில் எழுதி எந்த நேரடிப் பயனும் இல்லை என நம்பினேன். ஏனெனில் அது குறித்து முடிவு எடுக்க வேண்டியவர்களோ அவர்களுக்கு சொல்லும் நிலையில் இருப்பவர்களோ இங்கே இல்லை. அதனால் ட்விட்டரிலோ ஃபேஸ்புக்கிலோ தம் கருத்தைப் பதிவு செய்வது தாண்டி அதைப் பற்றி தீவிரமாகப் பேசுவது என்வரையில் சுத்தமாக அட்டைக்கத்தி அரசியல் தான். 5) ஈழப் போர் குறித்து, அது அநியாயம் என்பது இங்கே தமிழர்கள் பெரும்பான்மையானோருக்கும் தெரியும். அதைச் சொல்லவும் நிறையப்பேர் இருந்தார்கள். இருக்கிறார்கள். ஏற்கனவே நிறைய எழுதியும் விட்டார்கள். இதை எல்லாம் தாண்டி நான் மக்களுக்கு சொல்லிப் புரிய வைக்க ஏதுமில்லை என்பதே என் நிலை. அந்த விஷயத்தில் துரோகம் இழைத்த திமுகவையும், காங்கிரஸையும் அதன் பிற்பாடு நான் ஆதரிக்கவேயில்லை. குஜராத் 2002 கலவரம் குறித்து ஏன் எழுதினேன்? சரி. புத்தகம் ஏன் எழுதினேன், இப்போது ஏன் ட்விட்டரிலும், தமிழ்பேப்பரிலும் தீவிரமாய் மோடியை எதிர்க்கிறேன் எனப் பார்க்கலாம். மேலே சொன்ன ஐந்து காரணங்களுக்கும் அப்படியே நேர்மாறான சூழல். 1) 2003ம் ஆண்டிலிருந்து பத்தாண்டுகளுக்கு மேலாய் குஜராத் கலவரம் குறித்த நூல்களையும் செய்திகளையும் படங்களையும் தேடித் தேடி வாசித்து வருகிறேன். அது பற்றிய திடமான புரிதல் எனக்குண்டு (ஓரமாய் சில இருண்ட பக்கங்களும் உண்டு என்பது வேறு விஷயம். ஆனால் நாம் நேரடியாய் சம்மந்தப்படாத எல்லா விஷயத்திலும் அப்படித் தானே இருக்க முடியும்). அதாவது அதில் நரேந்திர மோடிக்கு எந்தளவிற்கு நேரடித் தொடர்புண்டு என்ற அறிதலில் உறுதி உண்டு. அதனாலேயே அவரைத் தொடர்ந்து எதிர்க்கிறேன். அவர் பிஜேபியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் தான் புத்தகம் எழுதத் தீர்மானித்தேன். மறுபடியும் நான் படித்தவை, படிக்காதவை எல்லாவற்றையும் தேடிப் படித்தேன். இதில் மோடிக்கு ஆதரவான பொருட்படுத்ததக்க தரவுகளையும் சேர்த்தே வாசித்தேன். பிறகு தான் எழுதினேன். அது ஓர் அரசியல் நூல் என்றே சொல்ல மாட்டேன். மோடியின் மீதான துவேஷம் ஏதும் அதில் இல்லை. அது ஒரு வரலாற்று நூல் மட்டுமே. 2) 2009 போல் அல்லாமல் தற்போது என் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் குறைந்த அளவிலான ஊடக சினேகங்கள் இருந்ததால் தான் புத்தகம் எழுத முடிந்தது. தொடர்ந்து கட்டுரைகள் எழுத முடிகிறது. இவை யாவும் நான் எழுதி தவறான புரிதலில் இருப்பவர்களில் கொஞ்சம் பேரையேனும் மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை அளித்தது. ட்விட்டரில் அரசியல் எழுதத் தொடங்கியதும் இதே காரணத்தால் தான். 3) மோடியை ஆதரிக்கும் 90% மத்தியில் மோடியை எதிர்க்கும் சிறுபான்மையினர் நீங்கள் சொல்வது போல் போலி செக்யூலரிஸ்ட்களாக எனக்கு யாரையும் தோன்றியதில்லை. சந்திரா போன்றவர்கள் உதாரணம். அதனால் அவர்களோடு இணைந்து செயல்படவில்லை என்றாலும் அதை தீவிரமாய் ஆதரிக்கிறேன். இங்கே சிலர் திமுக ஆதரவு அல்லது காங்கிரஸ் ஆதரவு அடிப்படையில் மோடியை எதிர்த்தாலும் அவர்கள் சொல்லும் குறிப்பிட்ட விஷயத்தில் உண்மை உள்ளது எனில் பிரச்சனை அடிப்படையில் அவற்றையும் ஆதரிக்கிறேன் (சந்தர்ப்பவாதம்?!). 4) மோடி பற்றி புத்தகமும், தமிழ்பேப்பரிலும், இங்கே ட்விட்டரிலும் எழுதுவதால் நேரடிப் பயன் உண்டு. அதன் காரணமாக சில ஆயிரம் பேராவது புரிந்து கொண்டு மாற்றி வாக்களித்தால் (பிஜேபி, காங்கிரஸ், அதிமுக, திமுக நான்கையும் புறக்கணிப்பது) அதுவே என் முயற்சிகளின் வெற்றி தான். அது தான் நோக்கம். இப்படிப் புரிந்து கொண்ட எல்லோரும் தம்மைச் சுற்றி உள்ளோரிடம் அதைப் பரப்ப வேண்டும். அதனால் ஓட்டுகள் மாறி விழ வேண்டும். சுருக்கமாகச் சொன்னால் தேர்தல் என்ற நேரடிப் பயன் இருப்பதால் தான் இதைச் செய்கிறேன். 5) மோடியின் 2002 கலவரத் தொடர்ப்பு பற்றி இங்கே அவரை ஆதரிப்போரில் கணிசமானோரில் தெரிந்திருக்கவில்லை. நான் அவர்களிடம் திரும்பத் திரும்ப அதை விளக்கிக் கேட்பது, இந்தக் கொடூரம் புரிந்த பின்னும் நீ அவர் வர வேண்டும் என விரும்புகிறாயா என்பது தான். அதை மீறி விரும்புபவர்கள் என்வரையில் இந்து வெறியர்கள் தாம். நான் குறிவைப்பது விஷயம் தெரியாத, ஆனால் புரிய வைத்தால் மாறிவிடும் தர்க்க புத்தியும் மனசாட்சியும் கொண்டவர்களைத் தான். இங்கே யாருக்கும் காங்கிரஸ் பற்றி தெரியாமல் இல்லை என்பதே என் புரிதல். போலவே திமுக மற்றும் அதிமுகவின் சல்லித்தனங்கலும் தெரியும். ஆனால் மோடி அப்படி அல்ல. இன்னும் அவரை இந்திய வளர்ச்சிக்கான பிதாமகனாகப் பார்க்கிறார்கள். அவர்களிடம் நான் பேச விரும்புகிறேன். அவர்களிடம் 2002 கலவரங்களை ஏற்றுக் கொள்கிறீர்களா எனக் கேட்கிறேன். அவ்வளவே. மற்றபடி, நான் 2002 கலவரத்தை முன்வைத்து மோடி எதிர்ப்பு நிலைப்பாடு எடுத்து விட்டேன், அதனால் அதைப் பிடித்துத் தொங்குகிறேன் என்பதைக் கடுமையாக மறுக்கிறேன். இன்னமும் 2002 கலவரங்களில் மோடியின் பங்கு குறித்து எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவரை வெறுக்கிறேன். அதனால் தான் எதிர்க்கிறேன். அதே சமயம் அதில் அவர் பங்கு இல்லை என்பது குறித்த புதிய தகவல்களை நிரூபணங்களை யார் முன்வைத்தாலும் அதைப் பரிசீலிக்க, என் கருத்துக்களை மாற்றிக் கொள்ள, விரிவாக என் புத்தகத்துக்கு நானே மறுப்பு எழுத நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன். உண்மையை விட பெரிது எதுமில்லை என நம்புகிறேன். உண்மையை மறுத்து விட்டு என்னை நானே ஏமாற்றிக் கொண்டு என்ன சாதித்து விட முடியும் நான்? அணு உலை விஷயத்தில் ஆதரித்தது விஞ்ஞான தர்க்கத்தின் அடிப்படையில் தானே ஒழிய காங்கிரஸ் ஆதரவில் இல்லை. அதே போல் கலைஞர் மீது calf-love இருந்ததும் அதன் நீட்சியாய் ஓரத்தில் இப்போதும் அவர் வசீகரிக்கிறார் என்பதும் நிஜம் தான். ஆனால் அரசியல் கருத்துக்களில் அவற்றை உள்ளே வர விட்டதில்லை. இப்போதும் கூட பிஜேபி, காங்கிரஸ், அதிமுக, திமுக நான்கு அணிகளையும் சேர்த்தே எதிர்க்கிறேன். ஆம் ஆத்மியும் அப்படியே. இப்போதைக்கு கம்யூனிஸ்ட்கள் மட்டுமே ஆதரிக்கும் தூரத்தில் இருக்கிறார்கள். அரசியல் பேசும் எவரையும் நீங்கள் ஆதரித்துப் பார்த்ததில்லை. அது எந்தப் பக்கமாக இருந்தாலும் சரி. உங்கள் பழக்கம் விளையாட்டுத்தனமாக ட்விட்டரை அணுகுவதாக இருக்கலாம் தான். அது உங்கள் தனிப்பட்ட பிரச்சனை. ஆனால் அதெப்படி உங்களைத் தவிர எல்லோருமே உள்நோக்கத்துடனே அரசியல் பேசுவார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அதனால் தான் அப்படிக் கேட்டேன். அது பதற்றம் தான். ஆனால் எவனோ செய்திருந்தால் வந்திருக்காது. அதை நீங்கள் செய்வதால் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது. நல்லவேளை, யாரிடமாவது பணம் வாங்கிக் கொண்டோ அல்லது எதிர்கால பதவி, சலுகை உள்ளிட்ட லாபங்களை உத்தேசித்தோ நான் மோடியை எதிர்க்கிறேன் என்று சொல்லாதவரை சந்தோஷம் தான். இந்தப் பதிவு கூட விளக்கம் என்பதைத் தாண்டி சுயபரிசோதனையின் ஒரு பகுதி தான். மேலும் மேலும் விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை. அது எல்லோருக்கும் வேடிக்கை விளையாட்டு ஆகிவிடும் என்பதால். தேவைப்பட்டால் நேரடி சந்திப்பும் சாவகாசமும் வாய்த்தால் மேற்கொண்டு இது குறித்துப் பேசலாம். புரிதலுக்கு நன்றி. http://tl.gd/n_1s1b1pq

No comments:

Post a Comment