Thursday, January 16, 2014

வாழ்ந்தால்தான் புரியும்

மிடில் கிளாஸ்... மிடியல கிளாஸ்!



பொங்கல், தீபாவளினு பண்டிகை வந்துட்டா, பொண்டாட்டி, புள்ளகுட்டிங்களுக்குப் புதுத்துணி, பலகாரம், பட்டாசுனு வாங்கிக் கொடுத்துட்டு, தனக்குப் புதுசா ரெண்டு ஜட்டி மட்டும் வாங்கிக்கிட்டு, நடு ஹால்ல பாயை விரிச்சுப் படுத்துக்கிட்டு, வர்ற போனுக்கெல்லாம் 'ஹேப்பி பொங்கல், ஹேப்பி மாட்டுப் பொங்கல், ஹேப்பி சக்கரைப் பொங்கல்’னு வாய் நிறைய வாழ்த்து சொல்ற ஆயிரக்கணக்கான அப்பாவி மிடில் கிளாஸ் மாதவன்களின் கண்ணீர்தான் இது...

பிஞ்சுபோன செருப்பையே ஃபெவிகால் ஒட்டி பல வருஷம் பயன்படுத்துற பரதேசிங்கய்யா நாங்க. மூணு நாளா யோசிச்சு, சரி 300 ரூபாய்க்குள்ள புதுச் செருப்பு ஒண்ணு வாங்கலாம்னு வந்தா, 'இந்தச் செருப்பை தார் ரோட்டுல போடலாம்... இந்தச் செருப்பைத் தண்ணில போடலாம்’னு 2000 ரூபாய் 3000 ரூபாய் செருப்புகளை எல்லாம் எடுத்துக்காட்டி அவமானப்படுத்துறீங்களே! தண்ணில போட்டு குழம்பு வெக்க நாங்க என்ன பருப்பா வாங்க வந்தோம்? தரையில போட்டு நடக்க செருப்பு தானே வாங்க வந்தோம்!

சாம்பார்ல தண்ணி ஊத்திப் பார்த்திருப்பீங்க, சால்னாவுல தண்ணி ஊத்திப் பார்த்திருப்பீங்க, சரக்குல தண்ணி ஊத்திப் பார்த்திருப்பீங்க... ஆனா, தீர்ந்துபோன ஷாம்பூ பாட்டில்ல தண்ணியை ஊத்தி யூஸ் பண்றதைப் பார்த்திருக்கீங்களா? அதைக் குலுக்கிக் குலுக்கி, ஒரு மாசத்துக்கு ஊரே குளிப்போம்யா!

அரை மூட்டை அரிசியும், ஒரு லிட்டர் நல்லெண்ணையும் வாங்கவே சொங்கிப்போயிக் கிடக்கிற வெங்கப்பய நாங்க. இதுல, அட்சயத் திரியைக்கு நகை வாங்கு, ஆடித் தள்ளுபடிக்கு நெக்லஸ் வாங்குனு, 'சின்னத்தம்பி’ பிரபு ஆரம்பிச்சு 'பெரியதம்பி’ சத்யராஜ் வரை, கேரக்டர் ஆர்டிஸ்ட் அங்கிள்களை வீட்டுக்கு அனுப்பி ஆசையைக் கிளறுறீங்களே... எங்க உடம்புல இருக்கிற ஏதாவது அங்கத்தை அடகு வைச்சாத்தான், தங்கம் வாங்க முடியும்னு உங்களுக்குத் தெரியாதுல்ல?

100 ரூபா கொடுத்துட்டோம்கிற ஒரே காரணத்துக்காக 'ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தையே சிரிச்சுச் சிரிச்சுப் பார்த்தவங்கய்யா நாங்க. 50 ரூபா கொடுத்துட்டோம்கிற காரணத்துக்காக 'அன்னக்கொடி’ல மனோஜ் பண்ண அட்டூழியத்தை வெறிச்சு வெறிச்சுப் பார்த்தவய்ங்களும் நாங்கதான். எங்ககிட்ட போய் ஆயிரம் ஆயிரமா வருமான வரியைப் பிடிச்சு ஈரக்கொலையை உருவுறீங்களே... இது நியாயமாரேரேரே..!

மாசத்துல மொத வாரம் ஹோட்டல்ல இட்லிக்கு சட்னியையும் சாம்பாரையும் தொட்டுக்கிட்டுச் சாப்பிடுற நாங்க, மாசக்கடைசில சட்னிக்கும் சாம்பாருக்கும் இட்லியைத் தொட்டுக்கிட்டுத் தின்னா, ஏதோ அவங்க மச்சினி கையைப் புடிச்சு இழுத்த மாதிரி முறைக்கிறீங்களே ஹோட்டல்கார்... ஹோட்டல்ல டிபன் பார்சல் வாங்கினா, குருமா பாக்கெட் தருவாங்க. ஆனா, அஞ்சு ரூவாவுக்கு வெறும் குருமா பாக்கெட் மட்டும் பார்சல் வாங்குறதைக் கண்டுப்பிடிச்ச கஞ்சப் பரம்பரைங்கப்பா நாங்க!

ஏ அரசாங்கமே... பெட்ரோல் விலையை எவ்வளவு வேணா ஏத்திக்க, நான் 100 ரூபாய்க்குத்தான் வண்டிக்கு பெட்ரோல் ஊத்துவேன். ஏ ஏகாதிபத்தியமே... குவாட்டர்ல ஆயிரம் பிராண்ட் கொண்டு வா. ஆனா, நான் 65 ரூபா குவாட்டர்தான் ஊத்திக்குவேன்னு கடமையாத்துற கன் பார்ட்டி நாங்க. டாஸ்மாக் உண்டியல்ல காசைப் போட்டு கவர்மென்ட் கஜானாவுக்கு ரீசார்ஜ் செஞ்சுட்டு, சிவனேனு போறவனைக் கூப்பிட்டு வாயை ஊது, வயித்தை ஊதுனு டார்ச்சர் பண்றீங்களே, 65 ரூபா குவாட்டர்ல அத்தர் வாசனையா வரும்... ஆல்கஹால் வாசனைதான் வரும்!

வெள்ளைக்காரன் ஒபேரா, கூகுள் குரோம்னு இன்டர்நெட் பிரவுசர் பிரவுசராக் கண்டுப்பிடிக்கிறப்ப, துணிக்கடையில் வாங்குற நாலே நாலு டவுசருக்கும் தனித்தனியா பில் போட்டா, ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு கட்டைப் பை வாங்கலாம்னு கண்டுபிடிச்சது யாரு... பூரா நம்ம மிடில் கிளாஸ்காரப் பயலுவதான்!

'கால் கிலோ கறி கொடுங்க’னு கேட்டா, ஏதோ கல்லாப்பெட்டி சாவியைக் கொடுங்கனு கேட்ட மாதிரி கோவிச்சுக்கிறாங்க. 'அட எனக்கு கொலஸ்ட்ரால்பா... வீட்டு நாய்க்கு வாங்கிட்டுப் போறேன்’னு சால்ஜாப்பு சொன்னா, 'அப்போ வெறும் எலும்பாப் போடட்டுமா சார்’னு நாக்குல நரம்பில்லாம நக்கல் அடிக்கிறாங்க. அந்தக் கால் கிலோ கறியில குழம்பு வெச்சு, சட்டிக்குள்ள கரண்டியை விட்டு கறி கிடைக்குமானு வரட்டு வரட்டுனு தேடிப் பார்க்கிற வலி உங்களுக்கு என்னைக்குமே புரியாது ப்ரோ!

ஒரு நாள் ஒரு வேளை உப்புமா சாப்பிட்டா தப்பா? வாரத்துல ஒரு நாள் ஒரு வேளை உப்புமா சாப்பிட்டா தப்பா? வருஷம் முழுக்க ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாள் ஒரு வேளை உப்புமா சாப்பிட்டா தப்பா? பெரிய தப்பு மாதிரி தெரியுதுல்ல! உப்புசப்பு இல்லாத அந்தத் துப்புக்கெட்ட உப்புமாவைச் சாப்பிட்டுத்தான்யா நாங்க உயிர் வளர்க்கிறோம். அட, அம்மாகூட பெத்த அம்மா, சின்னம்மா, பெரியம்மானு மூணு வகைதான். ஆனா, ரவை, கோதுமை, இட்லி, கிச்சடி, சேமியானு இந்த உப்புமா பல நூறு வகை. ஒரே ஒரு நாள் உப்புமாவை மூணு வேளையும் தின்னு பாரு... அப்பத் தெரியும் மிடில் கிளாஸ் கஷ்டம்!

குடும்பத்தோட தியேட்டர்ல படம் பார்க்கிறக் காசுக்கு, பொத்துக்கிடக்கிற பாத்ரூம் கதவை மாத்திடலாம்னு முடிவு பண்ணித்தான்யா திருட்டு டி.வி.டி. வாங்குறோம். இந்தா... 'தலைவா’ படம் தியேட்டர்ல முதல் நாள் கொண்டாடுறதுக்கு முன்னாடியே, திருட்டு டி.வி.டி-ல 30 நாள் கொண்டாடிருச்சே... அந்த பிசினஸுக்கு யார் காரணம்... நம்ம பயகதேன்!

'என்னது... இன்ஜின் ஆயில் மாத்த 250 ரூபாயா?’னு அதிர்ச்சியாகி, ரெண்டு ரூவாய்க்கு எலுமிச்சம் பழம் வாங்கி ஹெட்லைட்டு மேல வெச்சுக்கிட்டு ஓட்டுறவங்க நாங்க. காய்ச்சல் கீய்ச்சல் வந்தா டாக்டர்கிட்டயா போவோம்? நோ நெவர். 'ஜின்’னு முடியிற ஏதாவது மாத்திரையை வாங்கிப் போட்டுக்கிட்டா, உடம்பு கின்னுனு வந்திடும் என்பதே மிடில் கிளாஸ் நம்பிக்கை சார்!

இறங்கவேண்டிய ஸ்டாப் தள்ளி பஸ்ஸு பாகிஸ்தான் பார்டருக்குள்ளயே போனாலும், கண்டக்டர்கிட்ட மிச்சம் எட்டணா சில்லறையை வாங்காம இறங்க மாட்டோம். அப்படிப்பட்ட எங்ககிட்ட மிச்சம் ஒரு ரூபாய்க்குப் பதிலா, சாக்லேட் தந்து டார்ச்சர் பண்றீங்களே அண்ணாச்சி. போனாப் போகுதுனு தூக்கி எறிஞ்சுட்டுப் போக, அது ஹரி பட அருவா இல்ல அண்ணாச்சி, முழுசா ஒரு ரூவா!

பல்லு விளக்குற பேஸ்ட் தீர்ந்துபோனா, பூட்டை எடுத்து அது மேல தேய்ச்சுத் தேய்ச்சுப் பிதுக்கி, அதுல இருக்கிற பேஸ்ட்டை வேஸ்ட் பண்ணாம, திரும்பத் திரும்ப டேஸ்ட் பண்ணுவோம்!

ஆட்டு காது மாதிரி காலர் வெச்ச அப்பா சட்டையை ஆல்டர் பண்ணி பையனுக்குத் தர்றது, அம்மாவோட பழைய புடவையைக் கிழிச்சு பொண்ணுக்கு சுடிதார் தைக்கிறது, அண்ணன் டிரஸ்ஸை தம்பிக்குப் போட்டுவிடுறது, ரெண்டாவதாப் பொண்ணு பொறந்துட்டா 'பொண்ணைப் பையனாட்டம் வளர்க்கிறோம்’னு ஒரு tagline சேர்த்துட்டு அதே சட்டை-டவுசரைப் போட்டுவிடுறதுனு, ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுனதே நாங்கதான் பாஸ்!

சினிமா தியேட்டர் கேன்டீன்ல பாப்கார்ன் வாங்கினா செலவு அதிகம்னு, வீட்டுல இருந்தே கடலை மிட்டாயைக் கர்ச்சீப்ல கட்டிக் கடத்துவோம். ஒண்ணு, வீட்ல இருந்தே வாட்டர் பாட்டில்ல தண்ணி கொண்டுவந்துருவோம். இல்லை, வெளியே எங்கேயாவது தண்ணி பாட்டில் வாங்கினா, அந்தக் காலி பாட்டிலை வீட்டுக்குக் கொண்டுபோயிடுவோம்.

எந்த ஹோட்டலுக்குச் சாப்பிடப் போகலாம்னு நீங்க யோசிப்பீங்க. எந்த ஹோட்டலுக்குப் போனாலும் எதை மட்டும் சாப்பிடணும்னு நாங்க யோசிப்போம். இ.பி.கோ. சட்டத்தை விட அதிக ஓட்டைகள் எங்க பனியன்-ஜட்டியில இருந்தாலும், டி.வி. ரிமோட்ல ஆரம்பிச்சு டி.வி.டி. ப்ளேயர் வரை எல்லாத்துக்கும் சட்டையும் ஜட்டியும் போட்டுவிட்ருப்போம். ரிமோட் ரிப்பேரானா, அதைக் கொட்டிக் கொட்டி வேலை வாங்குவோம். அதே சமயம் டி.வி. ரிப்பேர் ஆச்சுனா, அதைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவோம்.

அம்மாவோ சமையலறையில் டப்பா டப்பாவா சில்லறை சேர்த்துவைக்க, அப்பாவோ டி.வி., ஃப்ரிட்ஜ் ஏன் அயர்ன் பாக்ஸ், குக்கர் வாங்குறப்பக் கிடைச்ச அட்டை டப்பாக்களைச் சேர்த்து வைக்க, பையனோ ஜீரோ பேலன்ஸ் தர்ற பேங்க்ல அக்கவுன்ட் ஆரம்பிச்சு கலர் கலரா ATM கார்டு சேர்த்துவைக்க, அக்காவோ ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டுல இருந்து தனக்கு வந்த கிரீட்டிங் கார்டுகளைச் சேர்த்து வைக்க, ஆக மொத்தக் குடும்பமும் கடைசி வரை காசு- பணத்தைச் சேர்த்து வைக்காம வாழுறதுதான் மிடில் கிளாஸ் வாழ்க்கை. இதெல்லாம் வாசிச்சாப் புரியாது...வாழ்ந்தால்தான் புரியும்!

விகடனில் நம்ம @thoatta ஜெகன்

No comments:

Post a Comment