Tuesday, January 21, 2014

கூகிளில் ஒரு எண்ட்ரி

Jackie Chiles @Rasanai

19th January 2014 from TwitLonger

கூகிளில் வேலை பார்ப்பது பல கணிப்பொறியாளர்களுக்கு கனவு. அப்படி கனவாய் இல்லாத எம்போன்றோர் டெக்னாலஜியில் இருந்து விலகிய “சீச்சீ, இந்த பழம் புளிக்கும்” டேமேஜர்கள். ’நான் கடவுள்’ வில்லன் போல் வெறும் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட் செய்து உருப்படிகளை மேய்த்து உருப்படாமல் போன கேஸ்கள். Glassdoor, Forbes முதல் வாராந்தரி ராணி வரை அனைத்து Best Places to work லிஸ்ட்டிலும் வரும் கூகிளில் இருக்கும் பே ஏரியா நண்பனிடம் “ஏண்டா, ஆண்ட்ராய்ட் ப்ராஜக்ட்ல இருந்தா ட்ராயர் மொதக்கொண்டு லாண்ட்ரி செஞ்சு தர்றாங்களாமே, திங்க சாப்பாடு, தூங்க ஸ்லீப்ப்பாடு (Sleep Pod) எல்லாம் ஃப்ரீ ஃப்ரீயாமே” என பெருமூச்சு விடுவதோடு ஜோலி முடிகிறது.

நிற்க, அப்படி கூகிளில் ஒரு எண்ட்ரி கிடைத்து, ’அடடே, இது தான் சிம்பனி ஆர்கெஸ்ட்ராவா?’ன்னு ஆவென ஆச்சர்யப்பட்டு, தட்டுத்தடுமாறி செட்டிலாவதை ஒரு திரைப்படமாக்கினால்? கேட்கவே சுவாரசியமாக இல்லை? அது தான் The Internship திரைப்படம். http://www.imdb.com/title/tt2234155/

கிட்டத்தட்ட நாப்பது வயதில், வாயால் வடை சுட்டு சேல்ஸ் தொழிலில் இருக்கும் 2 நண்பர்களுக்கு வேலை போய்விடுகிறது. எப்படியோ அதே வாயால் வடை சுட்டு கூகிளில் ஒரு இண்டர்ன்ஷிப், அதான் அப்பரசண்டியாகிவிடுகிறார்கள். கூகிள் கேம்பசில் சுகுர்ரான மத்த 20 வயது காலேஜ் பொடிசுகள் இவர்களை ‘யார்றா நீங்க’ எனப்பார்க்க, அவர்களோடு இந்த இரண்டு மாமாக்களும் ஜமா சேர்கிறார்கள். கூகிள்காரன், ஐந்தைந்து பேர் கொண்ட குழுக்களாக செட்டு சேர்ந்து பல ப்ராஜக்ட்ஸ் செய்யனும், முதலில் வரும் ஷேவிங் செட்டுக்கு தான் வேலைங்கிறான். யாருமே சேர்த்துக்கொள்ளாத இவர்களும், இன்னும் 3 பேரும் கட்டாயத்தால் குழுவாக்கப்படுகிறார்கள். கூகிளில் ஆஃபர் வாங்குகிறார்களா, ’ஆப்’பர் வாங்குகிறார்களா என்பதை டாரண்ட் திரையில் காண்க. (கவலை வேண்டாம், ஸ்பாய்லர்கள் ஏதும் சொல்லவில்லை, ஏனென்றால் படத்தில் ஸ்பாய்லர்களே இல்லை!)

கதை கனத்திலோ இல்லை பர்ஸ் கனத்திலோ வெயிட்டான பல ஆங்கிலப் படங்கள் உண்டு. அவை தான் பொதுவாய் உலகளவில் போனியாகின்றன, ஆஸ்கருக்கு தீனியாகின்றன. ஆனால், நிஜ சமகால அமெரிக்கா இதுபோன்ற சாதுவான காமெடிகள்,ரொமாண்டிக் காமெடிகள் மூலமாகத்தான் (ஓரளவுக்கு) வெளிப்படுகிறது என்பதென் துணிபு. இந்த ’ழான்றா’ (genre) படங்களின் பெருரசிகன் நான். இதற்கென்றே ஒரு செட்டு நடிகர்கள் உண்டு ஹாலிவுட்டில். நம் ஜெயம்ரவி,ஜீவா போல் முதல்வரிசைக்கு பின்வரிசையில் நின்றுகொண்டு வதவதவென ரெகுலர் இண்டர்வலில் படங்கள் விட்டுக்கொண்டேயிருப்பார்கள். வின்ஸ் வான் (Vince Vaughn), ஓவன் வில்சன் (Owen Wilson) இந்த கேட்டகரி நடிகர்கள். இவர்கள் அவதாரிலோ, அவெஞ்சர்சிலோ, அஃப்கானிஸ்தானிலோ அமெரிக்காவை (எத்தனை அ?) காப்பாற்றும் ஸ்க்ரிப்டில் நடிப்பதில்லை. இவர்களது காம்பினேஷனில் Wedding Crashers செம கல்லா. ’சின்னதம்பி பெரியதம்பி’ பிரபு,சத்யராஜ் போல் ஒரு இயல்பான கலாமாஸ்டர் மேட்டர் இவர்களுக்குள் உண்டு , அது இப்படத்திலும் நன்கு வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

இப்படத்தில் எனக்கு பிடித்த இன்னொரு விஷயம், சப்போர்டிங் காஸ்ட். குறிப்பாய் படத்தில் காண்பிக்கப்படும் இரு இந்தியர்கள். ஒருவர் இந்த அப்பரசண்டிகளை வடிவேலு போல் கரித்துக்கொட்டிக்கொண்டே இருக்கும் கூகிள் மேனேஜர் Mr.செட்டி. உழைத்து கூகிளில் முன்னேறிய ஒரு இந்திய மேலாளர் இப்படித்தான் இருப்பான். இந்தியர்களுக்கான டிபிக்கல் ஹாலிவுட் ஸ்ட்ரீயோடைப்பிங் இல்லாது, ஒரு தவிர்க்கமுடியாத thick accentஓடு, ஒரு boring பெர்சனாலிட்டியாக கச்சிதம். போலவே, நேஹா பட்டேல் என இவர்கள் செட்டில் உள்ள ஒரு இளம்பெண். என் மகள் 16 வயதில் இப்படித்தான் இருப்பாள் என தோன்றியது. போக, ஒரு முசுடு வெள்ளக்கார பய, ஒரு மரபார்ந்த சைனீஸ் பையன், ஒரு அக்ரெசிவ் ப்ரிட்டிஷ் பையன் என சாம்பிளுக்கொன்றாய் இன்றைய தலைமுறை. ஒரே சீனில் வந்தாலும் வில் ஃபெரல் பட்டாசு.

படத்தில் கதை, பெரிய திருப்பம், ஏமாற்றங்கள், வில்லன் ஏதுமில்லை. முடிவும் யூகித்திருப்பீர்கள். வில்லனாக சித்தரிக்கப்படும் அந்த ஒரு விஷயம் எனக்கு மிகச்சரியாக ஒத்துப்போகும் ஒரு விஷயம். அடிப்படையில் டீம் ஒர்க், சம்பந்தமேயில்லாத 5 பேர் எவ்வாறு அவரவர் கூடை விட்டு வெளியே வந்து நட்பாகி வெல்கிறார்கள் எனச்சொல்கிறது படம். படம் முழுதும் கூகிள் காம்பசில். ‘சொக்கா எனக்கில்லை’ என அங்கலாய்க்கும் அளவுக்கு சம்மரில் ஜொலிஜொலிக்கிறது கூகிள் ஆபிஸ். ஆமா, இவ்வளவு திருவிழா கூட்டமாவா இருக்கும் கூகிள்?

குறைகள்? நிறைய உண்டு. IMDBயில் பெரிய ரேட்டிங் இல்லை, கூகிளுக்கான ப்ராண்ட் ப்ளேஸ்மெண்ட் என வண்டி வண்டியாக கமெண்டுகள். கொஞ்சம் தட்டிகிட்டி நீட்டி முழக்கினால், ஹிந்தியில் அருமையாக செய்யலாம். ஒரு குளிர்ந்த வாரயிறுதி மாலையில், மனைவி அனுமதித்த ஒரு பியருடன், பக்கோடாவை கொறித்துக்கொண்டே பார்க்க, சிரிக்க ஏதுவான,சாதுவான படம். நான் அப்படி தான் பார்த்தேன், ஹிஹி.

பார்த்தேயாகவேண்டிய படமில்லை. ஆனா பார்த்துத்தான் பாருங்களேன்.

படத்தின் ட்ரைலர்
http://www.youtube.com/watch?v=a8DjuGlVknQ

(இப்பதிவை இங்கும் படிக்கலாம்
https://www.facebook.com/rasanaikkaaran/posts/1415275495381152 )

No comments:

Post a Comment