Tuesday, July 1, 2014

கந்தன் கருணை


luckykrishna

கந்தன் கருணை

http://www.twitlonger.com/show/n_1s2b4f1
திருமுருக. கிருபானந்தவாரியாரின் ‘கந்தன் கருணை’ சொற்பொழிவு அப்போது ரொம்ப பிரபலம். இந்த தலைப்பில் வாரியார் பேசுகிறார் என்றாலே கூட்டம் அம்மும். பெரும் வெகுஜன தாக்கத்தை ஏற்படுத்திய இந்த டைட்டிலை சினிமாவாக்க ஏ.எல்.சீனிவாசன் ஆசைப்பட்டார். ஏற்கனவே பக்திப் படங்களில் சிகரம் தொட்ட இயக்குனர் ஏ.பி.என்.னிடம் விவாதித்தார்.

வாரியாரின் ஆசியும் ஆலோசனையும் பெற்று திரைக்கதை எழுதத் தொடங்கினார் ஏ.பி.என்., இந்த படத்துக்கு பெரிய நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்ய விரும்பினார் ஏ.எல்.எஸ். ஆனால் casting மிகவும் பொருத்தமானதாக இருக்க ஏ.பி.என். மெனக்கெட்டார். முருகன் வேடத்துக்கு முத்துராமன், ரவிச்சந்திரன், சிவக்குமார் என்று நிறைய நடிகர்களுக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்து கடைசியாக சிவக்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முருகனை வளர்க்கும் கார்த்திகைப் பெண்கள், இதுவரை சினிமா ரசிகர்களுக்கு தெரியாத முகங்களாக இருக்க வேண்டும். ஆனால் ‘பளிச்’சென்று தெரியவேண்டும் என்று தேடினார் ஏ.பி.என்., அப்போது நாடகங்களில் பிரபலமடைந்திருந்த நாயகிகளை இதற்காக தெரிவு செய்தார். அவர்களில் ஒருவர் தர்மா. திராவிட இயக்க நாடக மேடைகளில் தெளிவான உச்சரிப்பும், பாந்தமான தோற்றமுமாக தர்மா பிரசித்தி பெற்றிருந்தார். பிற்பாடு தமிழக அமைச்சர் ஒருவரை மணந்து கொண்டார். தர்மாவை கை பிடித்த ராசியோ என்னமோ, அந்த அமைச்சர் மிகக்குறுகிய காலத்திலேயே முதலமைச்சர் ஆகிவிட்டார். கலைஞர் அவர்களின் துணைவியாரான ராஜாத்தி அம்மாள்தான் கந்தன் கருணையில் கார்த்திகைப் பெண்களில் ஒருவராக தோன்றினார்.

இதே படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தவர்தான் இன்றைய முதல்வர் புரட்சித்தலைவி அம்மா என்பதும் குறிப்பிடத்தக்கது.

படம் குறித்து இன்னொரு சுவாரஸ்யமான செய்தி. அப்போது குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்து, பூவை செங்குட்டுவன் எழுதி, பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பக்திப்பாடல் “திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்”. இந்தப் பாடலை கந்தன் கருணையில் பயன்படுத்திக்கொள்ள ஏ.பி.என். விரும்பினார். படத்தின் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவன் பெருந்தன்மையோடு ஒப்புக்கொள்ள அப்பாடலை மீண்டும் ரெக்கார்டிங் செய்து பயன்படுத்தினார்கள்.

No comments:

Post a Comment