Tuesday, July 1, 2014

மீண்டும் அம்மன் அவதாரம்




'மீண்டும் அம்மன் அவதாரம்’ என்றொரு படம் பார்த்தேன். கோடி ராமகிருஷ்ணாவின் ஃபேக் ஐடி யாரோ இயக்கியிருக்கிறார்கள். அதை விடுங்கள்.

கதாநாயகி குட்டி ராதிகா. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். கெட்டவர்களின் சூழ்ச்சியால் அவருக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. பரிசோதிக்கும் மருத்துவர் “பெரிய உயிர், சின்ன உயிர் ரெண்டுலே ஒண்ணைதான் காப்பாத்த முடியும்” என்கிறார். உடனே ராதிகாவின் மாமியார் அம்மனை வேண்டுகிறார். “சின்ன உயிரை நீ எடுத்துக்கோ. என் மருமகளை மட்டும் உயிரோடு கொடுத்துடும்மா”

பிரசவம் நல்லபடியாக நடக்கிறது. குழந்தை கொழுகொழுவென வளர்கிறாள். திடீரென்று குட்டிராதிகாவின் கணவர் zombie மாதிரி மாறி தன்னுடைய தலையை பிடித்துக்கொண்டு துடிக்கிறார். அப்போது மாமியார் புலம்புகிறார். “சின்ன உசுரை உனக்கு கொடுத்துடறேன்னு வேண்டிக்கிட்டு, அதை நிறைவேத்தாதது தப்புதான் தாயே. அதுக்காக என் புள்ளையை இப்படி தண்டிக்காதே!”

இதை கேட்ட ராதிகா உடனே குழந்தையை எடுத்துக்கொண்டு அம்மன் கோயிலுக்கு போகிறார். “என் மாமியாரோட வேண்டுதலை நான் நிறைவேத்துறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருக்கும் கிணற்றில் போய் தன் குழந்தையை பலி கொடுக்கிறார். கணவருக்கு சரியாகிவிடுகிறது.

சென்ஸார் என்னதான் புடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கதாநாயகியின் மார்புப் பிளவு லேசாக தெரிகிறது, தொப்புள் தெரிகிறது என்றெல்லாம் அதை ப்ளர் செய்யுமளவுக்கு கூர்மையான பார்வைகொண்ட தணிக்கை அதிகாரிகள், இப்படிப்பட்ட கேணைத்தனமான காட்சியை ஏன் அனுமதிக்கிறார்கள்? இந்த காட்சியை பார்த்துவிட்டு நம்மூரில் ஏதாவது ஒரு லூஸு வேண்டுதலை நிறைவேற்றுகிறேன் என்கிற பெயரில் கோயில் கிணற்றில் தன் குழந்தையை பலி கொடுத்தால் அதற்கு யார் பொறுப்பு?

இந்தியா போன்ற மத-இன-சாதிரீதியிலான காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைகள் புழங்கும் நாட்டில் இதுபோன்ற சினிமாக்களை தடை செய்ய வேண்டாமா. பக்தியின் பெயரால் இன்னும் எவ்வளவு அபத்தக் குப்பைகள் மக்களின் மனதில் கொட்டப்படப் போகிறதோ தெரியவில்லை :-(

No comments:

Post a Comment