Monday, July 21, 2014

சமநிலை

jeranjit

Ranjit Jeyakodi · @jeranjit

 20th Jul 2014 from TwitLonger


கட்டமைப்புகளும் கம்புசுத்தல்களும்.. தடுமாறும் சமநிலையும்.,


சாதாரணங்கள் கொண்டாடப்படுவது தமிழ் சினிமாவில் புதிய நிகழ்வு அல்ல. தியேட்டர்களில் வெற்றியடைந்தாலும் விமர்சனப்பார்வையில் அப்போதைக்கே இவை சாடப்பட்டும் பகடிசெய்யப்பட்டும் வந்திருக்கின்றன. ஒருவிதத்தில் இவையிரண்டுமே இயல்பானவை.

ஒவ்வொரு காலகட்டத்திலும் வெகுஜன ரசனை சாதாரணங்களைக் கொண்டாடும் அளவிலேயே இருந்திருக்கிறது. இவற்றிற்கிடையில்தான் நாம் இன்று கொண்டாடும் நல்ல சினிமாக்கள் பிழைத்துக் கிடந்திருக்கின்றன.

ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்ததன் பின்னான காலத்திலிருந்து எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒரு ட்ரெண்ட் இந்த வெகுஜன ரசனை சார்ந்து இத்தகைய சாதாரணங்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கின்றன. கடைசியாக இருந்த ட்ரெண்ட் ஹீரோயிச பஞ்ச் மசாலாக்கள். அவையும் வழக்கொழிந்த பின்னர் உருவாகியிருப்பதுதான் இப்போதைக்கு இருக்கும் பெயர் வைக்கவே முடியாத ஒரு ட்ரெண்ட்.

முந்தையவற்றிற்கும் இதற்குமான முக்கியமான இரண்டு வித்யாசங்கள்., அவை வெகுஜன ரசனைக்காக காட்டப்பட்ட கேளிக்கைக் கூத்துக்கள் என்பதை ஒப்புக்கொண்டிருந்தன & நல்லசினிமாவுக்கான அங்கீகாரத்தை அவை என்றைக்குமே கோரவில்லை.இதுதான் சினிமா என மார்தட்டிக்கொள்ளவும் இல்லை.

வெகுஜன சினிமாவை மக்கள் அங்கீகரிப்பதிலும், தொடர்ந்து அவை புற்றீசலாய் கிளம்பிக் கொண்டிருப்பதிலும் நமக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால் அபத்தமான உட்பொருள்களை வைத்துக்கொண்டு முதிர்ச்சியற்றுப் படமாக்கப்படும் இவை தான் ஆரோக்கியமான சினிமா, அடுத்தகட்டத்திற்கு நம் ரசனையை எடுத்துச் செல்லக்கூடிய சினிமா என்று கட்டமைக்கப்படும் பிம்பம் தான் ஆபத்தான ஒன்றாக இருக்கிறது.

இது அந்த வகைமை இது இந்த வகைமை என்று பெயர் சொல்கிறார்கள் துணைக்கு ஹாலிவுட் இயக்குநர்கள் பெயர்களையும் இழுத்துக் கொள்கின்றார்கள். என் முதுகை நீ சொறி உன் முதுகை நான் சொறிந்துவிடுகிறேன் என்ற கணக்காக இவர்களுக்குள்ளேயே செய்துகொள்ளப்படும் பரஸ்பர முட்டுக்கொடுத்தல்களால் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கற்பிதம் விதைக்கப்படுகிறது. பார்வையாளன் ஒரு கட்டத்தில் நம்பவே தொடங்கிவிடுகிறான் இவரே சொல்லிவிட்டார் அவரே சொல்லிவிட்டாரென.இவர்கள் எடுப்பவைதான் ஆகச்சிறந்த செல்லுலாய்ட் சிற்பங்கள் என்று. 

அபத்த நகைச்சுவை காலண்டர் தத்துவங்கள் எல்லாம்தாண்டி ஒரு உயிரற்ற கதைப்போக்கு இதுதான் புதிய அலை என விளம்பரங்கள் மற்றும் இணையப் போற்றுதல்கள் மூலம் நிரூபப்படுகின்றன.ரசிகன் ஆமாம் சொல்லியே ஆக வேண்டுமென அனைத்தும் செய்கின்றனர்.அவனும் ஒரு கட்டத்தில் ஆட்டு மந்தையாகி போகிறான். சிரிக்க வந்திருக்கிறேன் சிரித்துவிட்டுதான் போவேனென.காமெடி என்று சொல்லிவிட்டார்கள் புத்திசாலிதனமான படமென்றும் சொல்கிறார்கள் குழப்பம் வேண்டாம் சிரித்து சிலாகித்துவிடலாம் என.உனக்கு நான் உதவி எனக்கு நீ உதவி.

இறுதியாக ஒன்றை அங்கீகரிப்பதும் மறுத்து ஒதுக்குவதும் டிக்கெட் வாங்கி சினிமாவைப் பார்க்கப்போகின்ற ரசிகனின் கையில்தான் இருக்கிறது. இங்கு யாரையும் ஒதுக்கச் சொல்லிக்கோரவோ யாருக்கும் நியாயம் கேட்கவோ முயலவில்லை. முற்றிலும் அபத்தமான ஒரு போக்கிற்கு எந்த மட்டத்திலும் எதிர்வினையே எழாமல் போவதால் தடுமாறும் சமநிலையைச் சுட்டிக்காட்டும் நோக்கம் மட்டுமே.

இந்த போலிகளை உன்னதமென கட்டமைப்பதும் அதற்கு இவர்களே கம்புசுத்தி கொடுத்துக்கொள்ளும் உயரிய அங்கீகாரமும் ஒருவித பயத்தை தருகிறது என்பதே நிஜம் !

No comments:

Post a Comment