Monday, May 6, 2013
கச்சத்தீவு குறித்து சட்டசபையில் முதல்வர் ஜெ
கருணாநிதி எதை மீட்டிக் கொண்டிருந்தார்?
நான் முதன் முறையாக 1991ல் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு, "கச்சத் தீவை மீட்போம்" என்று அறிவித்தேன். கச்சத் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பது தொடர்பான தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 3.10.1991 அன்று எனது அரசால் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கச்சத் தீவை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமரை நேரில் பல முறை வற்புறுத்தி கூறினேன்.
கடிதம் மூலமும் வற்புறுத்தி இருக்கிறேன். "ஜெயலலிதா, கச்சத் தீவை மீட்டே தீருவேன் என்றாரே? ஏன் இன்னும் மீட்கவில்லை? அதை மீட்காமல் எதை மீட்டிக் கொண்டிருக்கிறார்?" என்று என்னை அடிக்கடி கேலி செய்து வந்துள்ளார் கருணாநிதி. பின்னர் 1996ம் ஆண்டு முதல் 2001 வரை மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார் கருணாநிதி. நடுவில் ஓர் ஆண்டைத் தவிர, 1996 முதல் ஒரு மாதத்திற்கு முன்பு வரை, வெவ்வேறு மத்திய அரசுகளை தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்தார் கருணாநிதி. ஆனால் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. மத்திய ஆட்சியில் பங்கு கொண்ட அத்தனை ஆண்டுகள், 16 ஆண்டுகளில், கருணாநிதி எதை மீட்டிக் கொண்டிருந்தார்? என்று அவர் தான் கூற வேண்டும்.
நான் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது, கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமையை இந்திய மீனவர்களுக்கு மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். கடிதங்கள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டேன். கருணாநிதியின் தயவில் மத்திய அரசு இருந்ததாலோ என்னவோ, எந்தவிதமான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை. 2006ம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து தமிழகத்தின் முதலமைச்சராக கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியில், திமுக ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. எந்த மத்திய அரசும், மாநில திமுக அரசும், 1974ம் ஆண்டு கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தனவோ, அதே அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை வகித்தன.
ஆனால், கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாறாக, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன. இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போதே, அதிமுக கழகம் எனும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில், பெருபாரி வழக்கினை மேற்கோள் காட்டி, கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுத்த 1974 மற்றும் 1976 ஆண்டைய ஒப்பந்தங்கள் ‘சட்டப்படி செல்லத்தக்கவை அல்ல' என்று உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 2008 ஆம் ஆண்டு ஒரு வழக்கினைத் தொடுத்தேன். இந்த வழக்கில் மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசையும் ஒரு பிரதிவாதியாக சேர்த்திருந்தேன்.
ஆனால், கருணாநிதி தலைமையிலான அன்றைய தமிழக அரசின் சார்பில் சாதகமான எதிர் உறுதி ஆவணம் ஏதும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், 2011ம் ஆண்டு மூன்றாவது முறையாக நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை இயற்றி தமிழக அரசின் வருவாய்த் துறையையும் இந்த வழக்கில் இணையச் செய்தேன். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த வரை கச்சத் தீவை மீட்பதற்காக சுண்டு விரலைக் கூட அசைக்காத கருணாநிதி, பல்வேறு காரணங்களுக்காக புதுப்பிக்கப்பட்ட டெசோ அமைப்பு மூலம் "1974ம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் கச்சத் தீவை விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என்றும், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதை பிரகடனப்படுத்த டெசோ அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது" என்றும் ஒரு தீர்மானத்தினை 15.4.2013 அன்று நிறைவேற்றி இருக்கிறார்.
திரு. கருணாநிதிக்கு உண்மையாகவே அக்கறை இருந்திருந்தால்... கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும்; தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறை திரு. கருணாநிதிக்கு உண்மையாகவே இருந்திருந்தால், இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கதல்ல என மத்திய அரசுக்கு எதிராக நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதே தமிழ்நாடு அரசையும் அதில் இணைத்துக் கொண்டு கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். இல்லையெனில், என்னுடைய கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாகவாவது மாநில அரசின் சார்பில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் இப்படி எதையுமே செய்யாமல், மத்திய அரசு எந்தவித எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்கிறது என்று பார்த்துவிட்டு பின்னர் மாநில அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்து கொள்ளலாம் என்ற மழுப்பலான முடிவை எடுத்தார் அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி. குறைந்தபட்சம், தான் தாங்கிப் பிடித்திருந்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழக மீனவர்களுக்கு சாதகமான வகையில் மனுத்தாக்கல் செய்ய சொல்லி இருக்கலாம். ஆனால், அவ்வாறு எதையும் கருணாநிதி செய்யவில்லை.
மத்திய அரசுக்கு கருணாநிதி அழுத்தம் கொடுக்காததன் காரணமாக, 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறப்பட வேண்டியது இல்லை என்று தெரிவித்து, என்னுடைய ரிட் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்துள்ளது. இதன் பின்னர், நான் மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், 8.6.2011 அன்று இந்த மாமன்றத்தில் தமிழக அரசின் வருவாய்த் துறையையும் கச்சத் தீவு வழக்கில் இணைத்துக் கொள்ளும் வகையிலான தீர்மானத்தை நிறைவேற்றினேன். இந்த வழக்கில் தமிழக அரசின் வருவாய்த் துறை இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னராவது மத்திய அரசை கருணாநிதி வற்புறுத்தி இருக்கலாம். அல்லது இந்த வழக்கில் திமுகவை அப்போதே இணைத்துக் கொண்டிருக்கலாம்.
ஆனால், இதில் எதையும் செய்யாமல், இப்போது ‘டெசோ' மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்து இருப்பது யாரை ஏமாற்ற என்பது தெரியவில்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மீது குற்றம் சாட்ட வேண்டும் என்பதற்காக நான் இதைச் சொல்லவில்லை. கச்சத் தீவு பிரச்சனையில் கருணாநிதி எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிய வேண்டும், இந்த மாமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இவற்றை எல்லாம் நான் இங்கே வேதனையுடன் குறிப்பிடுகிறேன். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஏழு முறை இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு, சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவங்களில் தமிழக மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களது உடைமைகள் இலங்கைக் கடற்படையினரால் நாசம் ஆக்கப்பட்டன. இவர்களில் 30 மீனவர்கள் இன்னமும் இலங்கை சிறைகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இது தவிர, 5 தமிழக மீனவர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இலங்கை சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில், தமிழக மீனவர்களைக் காக்க கச்சத் தீவினை மீட்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், இந்தத் தீர்மானத்தினை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு கேட்டுக் கொண்டு அமைகிறேன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment