Wednesday, June 26, 2013

விடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்? பார்ட்-3


Doha Talkies @dohatalkies


26th June 2013 from TwitLonger 

விடுதலைப்புலிகளை நான் ஏன் எதிர்கிறேன்? பார்ட்-3

ஆனால், போர் முடிந்து நான்காண்டுகள் ஆன நிலையில், ஈழத்தில் அழிந்த விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண பிராண்ட் தமிழ்தேசிய அரசியல் தமிழ்நாட்டில் பரப்பப்படுவது எனக்கு உண்மையில் கவலையை தோற்றுவித்திருக்கிறது. காரணம் மிக எளிமையானது. அண்டை வீட்டில் இருக்கும் உங்கள் சொந்தச் சகோதரனின் வாழ்க்கையை அடியோட அழித்துப் போட்ட தவறான ஒரு அரசியல் கொள்கையும், அணுகுமுறையும் உங்கள் வீட்டுக்குள் எட்டிப்பார்த்தால் உங்களுக்கு ஒருவித சுயநலம் சார்ந்த பதட்டம் ஏற்படுவது இயல்பு. அத்தகைய பதட்டமே தற்போது என்னை தொற்றிக்கொண்டிருக்கிறது. அதனாலேயே நான் புலிகள் அமைப்பை, அதன் கடந்தகால தவறுகளை பகிரங்கமாக பேசத்துவங்கியிருக்கிரேன் . இது மட்டுமே காரணம். வேறு ஒரு காரணமும் இல்லை. இதை நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.

தமிழக அரசியல் வரலாற்றில் பெரியாரியவாதிகளே ஆரம்பகாலத்தில் விடுதலைப்புலிகளுக்கு தளம் அமைத்துக்கொடுத்தவர்கள். அதிகபட்ச தியாகம் செய்தவர்கள். அந்த பட்டியல் நீளமானது. அது இங்கே தேவையில்லை. ஆனால் பெரியாரியவாதிகள் பிரபாகரனின் வீரத்தை மட்டும் பார்த்து அவரை ஆராதித்தார்களே தவிர, ஒரு இனப்போராட்டத்தை தலைமையேற்று நடத்த வீரம் மட்டுமே போறாது. அதற்குத் தேவையான பொறுமையோ, பொறுப்புணர்வோ, தொலைநோக்குப்பார்வையோ அதையெல்லாம் விட முக்கியமாக அரசியல் முதிர்ச்சியோ, விவேகமோ பிரபாகரனிடம் இல்லாமலிருந்ததை தமிழ்நாட்டு பெரியாரியவாதிகள் ஒருநாளும் உணரவில்லை என்பதே எனது பார்வை. அதை உணர்ந்த பெரியாரியவாதிகள் சிலரும் பிரபாகரனுக்கு அவரது குறைகளை தவறுகளை உரிய முறையில் சுட்டிக்காட்டவே இல்லை. அப்படி சுட்டிக்காட்டியிருந்தாலும் அதை பிரபாகரன் கேட்டிருப்பாரா என்றால் இல்லை என்பதே எனது பதில். காரணம் பிரபாகரன் யாருடைய பேச்சையும் கேட்டவரல்ல என்பதே வரலாறு. அவர் பலமும் பலவீனமும் அதுவே.

பிரபாகரனின் பலம் மற்றும் பலவீனம் குறித்து எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் பிரபாகரன் விஷயத்தில் நடந்த மிகப்பெரிய வரலாற்றுத் தவறு என்னவென்றால், தமிழ்நாட்டில் இருக்கும் யாருமே அவருக்கு ஆலோசனை கூறவே இல்லை. மாறாக பிரபாகரனது ஆணையை நிறைவேற்றும் தமிழக ஏஜென்டுகளாக மட்டுமே தமிழ்நாட்டு ஈழ ஆதரவு அரசியல்வாதிகள் (நெடுமாறன், வைகோ) இருந்துவிட்டார்கள் என்பது தான் எனது விமர்சனமும் கவலையும்.

அதாவது தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு அரசியல் களம் என்பது ஒருவழிப்பாதையாகவே இருந்துவிட்டது. பிரபாகரனின் ஆணையை நிறைவேற்றும் அடியாட்கள் வேலை மட்டுமே தமிழ்நாட்டு பெரியாரியவாதிகளுக்கும், மற்றவர்களுக்குமான பணியாக இருந்ததே தவிர, தமிழ்நாட்டு மக்களின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு ஈழ போராட்டத்துக்கு தேவையென்றால் புலிகளும் பிரபாகரனும் என்ன செய்யவேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்பதை இங்கிருந்து அவருக்கு யாருமே சொல்லவில்லை. சுயமரியாதையுள்ள தமிழ்நாட்டுத் தமிழனாக இந்த போக்கை எள்ளளவும் ஏற்க முடியாது. எந்த உறவானாலும் பரஸ்பர மரியாதை இருக்கவேண்டும் என்னும்போது தமிழ்நாட்டு ஈழ ஆதரவு என்பது மட்டும் எப்படி ஒருவழிப்பாதையாக இருக்கமுடியும்? ஏன் இருக்கவேண்டும்?
http://tl.gd/n_1rl1d9k

No comments:

Post a Comment