Tuesday, July 9, 2013

அபத்தம்

முதலில் தமிழ்நாட்டில் சாதிகள் ஒழிய வேண்டும் என்கிற கூற்றே அபத்தம். சமூக உளவியல் அடிப்படையில் ஒவ்வொரு குழுவுக்கும் தேவையான சமூக பாதுகாப்பு அந்தந்த சாதியின் identityயின் அடிப்படையில் தான் அமைந்து வருகிறது. இது நல்லதா, கெட்டதா என்பது வேறு விவாதம். ஆனால் இன்றைய சூழலில் சாதி ரீதியிலான identity ஒரு பாதுகாப்பு. ஆக சாதி இல்லாத தமிழகம், அல்லது இந்தியா என்பதே ஒரு utopia.

திராவிட கட்சிகளின் மீது பழியைப் போடுதல் அடுத்த அபத்தம். திராவிட கட்சிகள் இருப்பதனாலேயே தான் இன்றைக்கும் சமூக நீதி தமிழகத்தில் இருக்கிறது என்பதில் தெளிவாக இருக்கிறேன். இதே பிரச்சனை வடக்கிலோ, மேற்கிலோ நடந்தால் அது இங்கிலிஷ் சேனல் செய்தி. அதை தாண்டி எதுவுமில்லை.

இந்த இழப்பினை வெற்றியாக பாமக கொண்டாடுதல் எவ்வளவு அபத்தமோ, அதற்கு ஈடான அபத்தம் “இளவரசனுக்கு வீரவணக்கம்” என்று விடுதலை சிறுத்தைகள் போஸ்டர் ஒட்டுவது. காதல், அதற்கு பின்னான கலவரம், உயிரிழப்புகள், மோதல்கள் என எல்லாமே மோசமானவை தான் என்றாலும், இந்த காரணங்களுக்காக இணையமெங்கும் பாமக-வினை ஒரு சாதி வெறி கட்சி என்று சொல்லி மட்டம் தட்டுதலில் எனக்கு உடன்பாடில்லை. தர்மபுரி கலவரத்துக்கு பிறகு தமிழ்நாட்டில் 53 சாதி கட்சிகள் கூட்டம் போட்டு இருக்கின்றன. தடை செய்ய / சமூகரீதியாக புறக்கணிக்க நம்மால் முடியுமா என்று பார்க்க வேண்டும்.

கொஞ்சம் கொஞ்சமாக இந்த இணைய பொதுவெளி எதிர்ப்பு என்பது வன்னியர் ஒட்டுகளை நாமாகவே ஒருங்கிணைக்கிறோம் என்பதில் போய் முடியும். அரசியல் கணக்குகளில் ராமதாஸ் தோல்விகள் பெற்றிருந்தாலும், பெரும்பான்மையான அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட ஒட்டு வங்கி என்பது எந்த அரசியல் கட்சிக்கும் தேவை.

19 வயது இளவரசன் காதலிக்கக்கூடாதா என்றெல்லாம் கேள்விகள் வருகிறது. 19 வயது இளவரசன், 22 வயது திவ்யாவை ஏன் காதலித்தான் என்பதில் சில சமூக சிக்கல்கள் இருக்கின்றன. தரும்புரியும் தமிழ்நாடும் சச்சின் -அஞ்சலியோ, அபிஷேக்பச்சன் - ஐஸ்வர்யா ராயோ வாழும் இடங்கள் கிடையாது. காடு வெட்டி குரு, அன்புமணி ராமதாஸ் உட்பட பலர் மாமல்லபுரம் கூட்டத்தில் பேசியதில் எனக்கு உடன்பாடில்லையென்றாலும், இத்தனை நாள் பெருங்கலவரங்கள் செய்யாத ஒரு கட்சி, ஒட்டுக்காக ஒரு ஊரை கொளுத்தும் என்று நம்புவதிலும் எனக்கு உடன்பாடில்லை.

இது சமூக புரிதல் சார்ந்த பிரச்சனை. இன்றைக்கு ராமதாஸ் ஒரு ஜாதி வெறியர் என்று சொல்லும் இதே இணைய (பேஸ்புக், டிவிட்டர், இன்னபிற) அறிவுஜீவிகள் தான் மோடி வந்தால் இந்தியாவுக்கு நல்லது என்று நம்புவர்கள். இவர்கள் தான் அன்னா அசாரேவால் இந்தியாவுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று நம்பியவர்கள். லஞ்சமில்லாத, ஊழலில்லாத, சாதியில்லாத ஒரு சமூகம் மலரும் என்று எழுதிக்கொண்டிருப்பவர்கள். சாத்தியமில்லாத, சாத்தியப்படாத விஷயங்களை மட்டும் யோசிப்பவர்களுக்கு சமூக உளவியல் காரணங்களும், நோக்கங்களும் புரியும் என்று எனக்கு தோன்றவில்லை. http://tl.gd/n_1rl8hma

No comments:

Post a Comment