Thursday, November 8, 2012

ரஹ்மான் இளையராஜாவிடம் என்ன கற்றார்

Cross-Posted from Here By @rozavasanth

ரஹ்மான் நேரடியாக இளையராஜாவிடம் என்ன கற்றார், பெற்றார் என்பது தெளிவில்லை; அது குறித்த விவரிப்பை அவர் நேர்மையாக முன்வைப்பார் என்று எனக்கு தோன்றவில்லை. ஒருவேளை ரஹ்மான் ராஜாவுடன் பணியாற்றியிருக்கவே இல்லையென்றே வைத்துகொண்டாலும்கூட, ராஜாவின் 16 வருட பயணமின்றி ரஹ்மானின் இசை தோன்ற வாய்ப்பில்லை. ராஜாவின் பாணியை ரஹ்மான் பின் பற்றினார் என்று சொல்லவரவில்லை (ஒரளவு சிலவற்றை பின்பற்றினார் எனினும், பின்பற்றுவது சாத்தியமில்லை என்பது வேறு விஷயம்). ரஹ்மான் தந்த இசையை 80கள் இசையின் நாம் முற்றிலும் விளங்கிகொள்ளகூடிய இயல்பான பரிணாம மாற்றமாகவே பார்க்கமுடியும் (வளர்ச்சி என்று நான் இங்கு வேண்டுமென்றே சொல்ல விரும்பவில்லை). ரஹ்மான் தனக்கே தனித்துவமான பல சோதனைகளையும் புதுமைகளையும் செய்தார். அவை முன்னதின் தொடர்ச்சியாகயே நிகழ்ந்தது . மாறாக ராஜா செய்தது குவாண்டம் இயற்பியலின் தோற்றம் போன்ற ஒரு புரட்சி; அது அதற்கு முன்னான தமிழ் திரையிசையின் தொடர்ச்சியயாவும், தொடர்பறுந்த பாய்ச்சலாகவும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. இதை பற்றியெல்லாம் விரிவாக பேசலாம். இதை புரிந்துகொண்டவர்கள் ஏற்றுக்கொண்டவர்களுடன் மட்டுமே இப்போதைக்கு பேச விழைகிறேன். இங்கே கவனிக்க வேண்டியது ராஜா தொடர்ந்து தனக்கு முந்தய இசை முன்னோர்களை தெளிவான வார்த்தைகளில் அக்னாலெட்ஜ் செய்துள்ளது. ஜீகே வெங்கடேஷை குரு என்கிறார்; எமெஸ்வியும் ராமமூர்த்தியும் துப்பிய எச்சிலாக தன் இசையை சொல்கிறார். இது மட்டுமில்லாது தன்னுடய எல்லா உந்துதல்களையும், நம்மால் எளிதில் கண்டுபிடிக்க இயலாத பல உந்துதல்களையும் நேர்மையாக முன்வைத்திருக்கிறார். மாறாக ரஹ்மான் திரையிசையில் தான் ஏறி நிற்கும் தோள்களையும் தூண்களையும் முறையாக அக்னாலெட்ஜ் செய்து நானறியேன். ஏதோ அங்கொன்று இங்கொன்றாக சம்பிரதாயமாக சொன்னது மட்டுமே. ரஹ்மான் புயலாக நுழைந்து, பூகம்பமாக புகழ் பெற்ற பின், ஒரு குமுதம் பேட்டியில் தனக்கு பிடித்த தன்னை பாதித்த இசையமைப்பாளர்களாக எம்மெஸ்வியையும் டி.ராஜேந்தரையும் குறிப்பிட்டார். அதை வாசித்து அன்று கொதிப்படைந்தேன். (இந்த தகவலை அண்மையில் ராஜேந்தர் சொல்லியிருப்பார்; பலர் ராஜேந்தர் உடான்ஸ் விடுவதாக எடுத்து கிண்டலடித்திருப்பார்கள். ஆனால் ரஹ்மான் சொன்னதான செய்தி உண்மை.) இந்நிலையில் நேரடியாக ராஜாவுடன் பணியாற்றியதன் மூலம் பெற்றதை எல்லாம் ரஹ்மான் ஒருநாளும் நேர்மையாக முன்வைக்க போவதில்லை. ராஜாவின் செல்வாக்கை ஒழிக்க பாலசந்தர் மணிரத்தினம் போன்றவர்களால் ரஹ்மான் உருவாக்கப்பட்டதான கதை இன்று நமக்கு தெரியும். அது அப்படியே உண்மையெனில் அன்று ரஹ்மானுக்கு ஒரு தொழில் சார்ந்த நிர்பந்தம் இருந்திருக்க கூடும். ஆனால் அதற்கு பின்னும் அவர் வெற்று உபசார வார்த்தைகளை தவிர பெரிதாக பேசியதாக தெரியவில்லை. தெரிந்தால் மகிழ்வேன். Cross-Posted from Here By @rozavasanth

No comments:

Post a Comment