Friday, October 18, 2013

கதையின் நீதி



பொர்க்கி போயட்டு @LathaMagan


17th October 2013 from TwitLonger


நேற்றைய இரவை பல நாள் மிச்சம் வைத்திருந்த நைய்யாண்டியுடன் அழித்துத் தொலைத்தாயிற்று. நாய்வண்டி என்றொரு நண்பர் டுவிட்டரில் சொன்னார். அந்த வார்த்தையைக் கேட்டபிறகும், இந்தப்படத்தை பார்த்துவிடுவதென்ற என் ஒரே மன தைரியத்தைப்பாராட்டி, எனக்கு நானே, “இந்த இரவு ஒரு புத்தகத்திற்குக் கொடுத்துவிடடா” என பரிசளித்துக்கொண்டேன். ஆசையில் வாங்கி சோம்பேறித்தனத்தில் தூங்கும் புத்தகங்களுக்குள் தேடியதில், வனசாட்சி கண்ணில் பட்டது. நேற்று மாலைதான் நண்பர் ஒருவர் வெட்டுப்புலி பற்றி படிக்கலாமா என்றொரு கேள்வியைக்கேட்டிருந்தார். அந்தக் கேள்வியும், சில நாட்களுக்கு முன் தமிழ்மகனின் மூன்று நூல்கள் குறித்த அரங்கில் கலந்து கொண்டதும் நினைவுக்கு வர (அரங்கில் பேசப்பட்ட மூன்று நூல்களில் நான் மிச்சம் வைத்திருந்தது வனசாட்சி மட்டும். ஆண்பால் பெண்பால் & வெட்டுப்புலி முன்பே படித்திருக்கிறேன்) அந்தப்புத்தகத்தினூடாகவே இந்த இரவை ஓட்டியாயிற்று. புத்தகத்தைப்பற்றி வாழைப்பழச்சோம்பேறித்தனம் இடம் கொடுத்தால், இன்னொரு நாள் எழுதுகிறேன். சொல்ல வந்த விஷயம் அது இல்லை

புத்தகத்தை முடிக்கும் போது மணி ஐந்து. சரி ஒரு காபியையும் சில பல வடைகளையும் உள்ளே தள்ளிவிட்டு வந்து கட்டையைச் சாத்தலாம் என்ற முடிவில் பைக்கை எடுத்துக்கொண்டு டீக்கடைக்குப் போகும் பாதையில் குறுக்காக, சுமார் முக்கால் அடியில் ஒரு பாம்பு. (பெயரெல்லாம் கேட்காதீர்கள். பாம்புகளிடம் பேசி பேர் கேட்கும் அளவுக்கெல்லாம் மொழிஆளுமை எனக்குக் கிடையாது. ) மண் தரையில் நெளிந்து கிடந்தது, பைக் சத்தம் கேட்டதும் சுமார் காலடிக்கு துள்ளி, குறுக்கோடி வலது பக்கம் இருந்த தேங்கிய நீரில் பாய்ந்தது. நண்பர்களுக்குத் தெரியும், பாம்பின் மீதான எனது ஈர்ப்பு. பாம்பாட்டிச் சித்தர் அளவு வலது கையில் நான்கு இடது கையில் நான்கு என்று பாம்பைப்பிடித்து விளையாடிக்கொண்டிருக்கும் ஒரு சித்திரம் மனதில் வந்தவர்கள் இந்த இடத்தில் வலதுபுற பாதையைத் தேர்ந்தெடுத்து, எனது புரபைலின் புகைப்பட ஏரியா பக்கம் போய், எனது பிஞ்சு மூஞ்சுதனை பார்த்து பயன்பெற பணிக்கிறேன். இது வேறு வகையான ஈர்ப்பு. தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கும் ஈர்ப்பு. ஆனாலும் முழு இரவு விழித்தது கண்ணைக்கட்டியதால், கடந்து போய்விட்டேன். நொறுக்குத்தீனிகளை முடித்து திரும்பி வரும் போது அதே இடத்தில் அதே பாம்பு. இந்த முறை கொஞ்சம் தெளிவும் நேரமும், கூடவே வெளிச்சமும் இருந்ததால், சத்தம் எழ பைக்கை முறுக்கிக்கொண்டே கொஞ்ச நேரம் நின்றேன். பாம்பு இந்த முறை நகரவில்லை. கொஞ்சம் முன்னே நகர்த்த அதுவும் கொஞ்சம் முன்னே நகரும். வேகமாய் அதை நோக்கி நகர்த்தினால், அதுவும் வேகமாய் நகரும், சுமார் நாலு அடி அகல பாதை, அரையடி இடைவெளி (பைக்குக்கும் பாம்புக்கும்). இந்த விளையாட்டு சுமார் 15 நிமிடம் ஓட்டிவிட்டு பிறகு அதைக்கடக்கவிட்டு, பின் நான் கடந்து அறை வந்து சேர்ந்தேன்.

சிறுவயது நினைவுகளெல்லாம் உள்ளே ஓடிக்கொண்டிருக்கிறது. வீட்டிற்கு பின்பக்கம் ஒரு பாம்புப்புற்று உண்டு. வெள்ளிக்கிழமையானால் சின்னக்கிண்ணத்தில் போய் பால் வைத்துவிட்டுவரும் சித்தி உண்டு. பொதுவாகவே ஆறுமணிக்கு மேல் பாம்பு என்ற வார்த்தையை வீட்டில் பெருசுகள் சொல்ல மாட்டார்கள். சிறுசுகள் எங்களையும் சொல்லவிடமாட்டார்கள். ”பூச்சி” / “பெரிய புழு” / “மேற்படியிது” மாதிரியான கோட் வேர்ட்ஸ் உருவாக்கப்பட்டிருந்தன. சிறுவர்மலர் போன்ற இலக்கிய பத்திரிக்கைகள் படிக்க ஆரம்பித்த காலத்தில், அந்தப்புற்றிற்கும், பூமிக்கடியில் இருக்கும் நாகலோகத்திற்கும் ஒரு லிங்க் இருப்பதாகவும், அங்கே நாகராஜா நாகராணி சகிதமாக ஆட்சிசெய்வதாகவும், உலகின் எல்லாப்பாம்புப்புற்றுகளுக்கும் நாகலோகத்திற்கும் பாதை உண்டெனவும், சொந்தக் கதையை எழுதி, பள்ளியில் கட்டவிழ்த்து விட்டிருந்தேன். பாம்புக்கு புற்றுகட்டத்தெரியாது, அது கரையான் புற்று என்று அறிவு வந்த காலத்தில், நாகதோஷமோ என்ன எழவோ சொல்லி, என் சுண்டுவிரல் உயரத்தில் பாதி உயரத்திற்கு வெள்ளியில் நாகர்சிற்பம் (என்று சொன்னால், உளி கூட நம்பாது. பிறந்ததிலிருந்தே கொஞ்சம் கூட வளர்ச்சியின்றியும் அதற்குமெல் மெலிய முடியாது என்ற நிலைவரை ஒரு பாம்பு மெலிந்திருந்தால் மட்டுமே ஒரு பாம்பு எங்கள் சிற்ப சைஸுக்கு வரமுடியும். அதன் மேல் நோக்கி நீண்ட தலையின் கழுத்துப்பகுதியில் பழக்கமுடைய யார் விசையுடன் துப்பினாலும், எங்கள் சிற்பம் வளைந்துவிடும்) செய்து நாகர்கோயில் உண்டியலில் போட்டு விட்டு வந்தோம்.

இந்தப்பெருங்கதையின் நீதி என்னவென்றால், விடிஞ்சுருச்சு, இனிமே தூங்கமுடியாது.ப்ச்!

No comments:

Post a Comment