Saturday, May 4, 2013

ரத்ததானம்

ரத்ததானம்
ரத்தமும், தசையும், எலும்பும் சேர்ந்ததுதான் உடல். ரத்த ஓட்டம்தான் உடலியக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. ரத்தஓட்டம் தடைபடுவதால் தான் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் மாரடைப்பும், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டால் பக்கவாதமும், தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடை பட்டால் புண்களும் வந்துவிடும். ரத்த ஓட்டம் இல்லாமல் எந்த ஜீவராசிகளும் கிடையாது. ரத்த ஓட்டம் சீராக இருந்தால் எந்த வியாதியும் கிடையாது.
***
ரத்தம் உடல் முழுவதும் ஓடுகிறது என்பதே சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் கண்டுபிடிக்கப்பட்டது. ரத்த ஓட்டத்தை கண்டறிந்தவர் வில்லியம் ஹார்வி. அதன்பிறகு தான் ரத்தத்தின் வழியாக மருந்துகளை செலுத்தினால் உடலின் எந்த பாகத்திற்கான வியாதியும் குணமடையும் என்பதே அறியப்பட்டது. ரத்தம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், பிளேட்லட் அணுக்களையும், திரவ பிளாஸ்மாவையும் கொண்டது. வெள்ளையணுக்கள்தான் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை. ரத்தம் சிவப்பாக இருப்பதற்கு ஹீமோகுளோபின் காரணம். இது ஒரு புரதப்பொருளாகும். இதுதான் நுரையீரலில் இருந்து ஆக்சிஜனைப் பெற்று திசுக்களுக்கு வழங்குகிறது.
***
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் `பம்ப்` செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம் எனப்படுகிறது. இதயம் ஒரு நிமிஷத்துக்கு 5 லிட்டர் ரத்தத்தை பம்ப் செய்து எல்லா உறுப்புகளுக்கும் அனுப்புகிறது. இப்பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை. ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. அவ்வளவு வேகத்தில் மருந்து ரத்தத்தின் வழியே கடத்தப்படுவதால்தான் மாத்திரை சாப்பிட்டவுடன் நோயின் தாக்கம் உடனடியாக குறைந்ததுபோல உணர முடிகிறது.
***
ரத்த ஓட்டத்தின் மூலம் நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜன் ரத்தம் எடுத்துச் செல்லப்படுகிறது. திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடு நுரையீரலுக்கு எடுத்து வரப்பட்டு மூக்கு வழியே வெளியேற்றப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் உள்ள ஆன்டிஜன் எனும் புரதத்தின் தன்மைக்கேற்ப ரத்தங்களை வகைப்படுத்துகிறார்கள். அதன்படி `ஏ`, `பி`, `ஏபி`, `ஓ` என 4 குரூப் ரத்தம் உள்ளன. இது தவிர ஏ1, ஏ2 என்ற உப `குரூப்`களும் ரத்தத்தில் உண்டு. `ஓ` பிரிவு ரத்தம் உள்ளவர்கள் மற்ற அனைவருக்கும் ரத்ததானம் கொடுக்கலாம். அதனால்தான் அவர்களை “யுனிவர்சல் டோனர்` என்று அழைப்பதுண்டு.
***
ரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டால் பல வியாதிகள் வந்துவிடும். ஹீமோகுளோபின் குறைந்தால் ரத்த சோகை வியாதி ஏற்படும். இதனால் ரத்தம் இளஞ்சிவப்பாக மாறிவிடும். பசி குறையும், சோர்வு ஏற்படும், மூச்சிறைக்கும். நோய் முற்றிவிட்டால் நாக்கு வெளிறி விடும். நகங்கள் அடிக்கடி உடையும். ரத்த சிவப்பணுக்களை உடலில் செலுத்தி இந்த வியாதிக்கு சிகிச்சை அளிப்பார்கள். இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலம் ரத்த சோகை வராமல் தடுக்கலாம். கீரை, காய்கறிகள், பருப்பு வகைகள் அதிகம் சேர்க்க வேண்டும். அசைவ உணவிலுள்ள இரும்புச்சத்து உடலால் எளிதில் கிரகிக்கப்படுகிறது.
***
ரத்தசோகை ஆண்களை விட பெண்களைத்தான் அதிகம் தாக்கும். மாதவிடாய் காலத்தில் அவர்கள் அதிக ரத்தத்தை இழக்கிறார்கள். கர்ப்பமாய் இருக்கும்போது கருவிலுள்ள சிசுவுக்கு ரத்தத்தின் வழியே உணவு கடத்தப்படுகிறது. பிரசவ நேரத்திலும் பெண்கள் ரத்தம் இழக்கிறார்கள். எனவே பெண்கள் சத்தான உணவுகளை உட்கொண்டு உடலை நல்ல தகுதியுடன் வைத்திருந்தால் மட்டுமே ரத்த சோகையை தவிர்க்க முடியும். பாதிப்பு உடையவர்களுக்கு சத்து மாத்திரைகள், மருந்துகள் கிடைக்கின்றன. ஆனால் அவசியமற்ற நேரத்தில் வைட்டமின் மாத்திரைகளை விழுங்கி வருவது பயன் தராது. அதேநேரம் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
***
நம் நாட்டில் ஏறக் குறைய 50 சதவீதம் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் ரத்தசோகை இருப்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதனால் அவர்கள் எளிதில் களைப்படைவதால் உழைப்பு, உற்பத்தி எல்லாமே பாதிக்கப்படும். இது நாட்டிற்கு பெரிய நஷ்டம். இதைத் தடுக்க அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதைவிட இரும்புச்சத்து நிறைந்த உப்பை சமையலில் சேர்த்துக் கொள்வது சிறந்த பலனைத் தரும் என்று உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இரும்புச்சத்துள்ள உப்பு சேர்ப்பது மருந்து மாத்திரைகளை விட நல்லது. பக்க விளைவற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இனியாவது சாதா உப்பிற்குப் பதில் இரும்புச்சத்து நிறைந்த உப்பு உபயோகிக்கப் பழகுங்கள்.
***
ரத்த பாதிப்புகளில் குறிப்பிடத்தக்க இன்னொரு வியாதி தாலசீமியா. இதுவும் ரத்த இழப்பால் ஏற்படும் வியாதி தான். இதற்கு அவ்வப்போது போதுமான ரத்தம் வழங்கிக் கொண்டிருந்தால்தான் பாதிக்கப்பட்டவர் பிழைக்க முடியும். வாழ்நாள் முழுவதும் மாதம் ஒரு முறை ரத்ததானம் பெற்று வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இதேபோல பெரிய அறுவைச் சிகிச்சைகள் முதல், விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை அளிப்பது வரை பலதரப்பட்டவர்களுக்கும் உயிர் பிழைக்க ரத்தம் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. ஆனால் போதிய ரத்தம் கிடைக்காததால் ஏராளமானவர்கள் உயிரிழக்கிறார்கள்.
***
மருத்துவ சிகிச்சைக்கு ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி யூனிட்டுக்கு மேல் ரத்தம் தேவைப்படுகிறது. இதில் 20 சதவீத ரத்தம் அவசர சிகிச்சைக்கு தேவைப்படுகிறது. ஆனால் தானமாக கிடைக்கும் ரத்தம் குறைவாகத்தான் இருக்கிறது. உடற்தகுதி உடையவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை ரத்தம் கொடுத்தாலே ரத்த தேவை பூர்த்தியாகி விடும் என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. 18 முதல் 60 வயது வரையுள்ள ஆரோக்கியமான ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்யலாம். எய்ட்ஸ், சிறுநீரக நோய், வலிப்பு நோய் உள்ளவர்கள் தவிர உடல் எடை 45 கிலோவுக்கு மேற்பட்டவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராம் சதவீதமும், ரத்த அழுத்தம் குறிப்பிட்ட அளவுக்கு இருப்பதும் அவசியம்.
***
அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரத்த வங்கிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ரத்ததானம் அளிக்கலாம். ரத்ததானம் செய்வதால் எடை குறையும், உடல்நலம் பாதிக்கும் என்பது கட்டுக்கதை. ரத்ததானம் செய்தால் புதிய ரத்தம் ஊறத் தொடங்கும் என்பது தான் உண்மை. இதனால் நமது உற்சாகமும், உடல்நலமும் கூடும். நண்பர்கள், உறவினர்களுக்கு ஆபத்து ஏற்படும்போது மட்டும் அவசர அவசரமாக ரத்தத்தை தேடி அலையும் நிலை மாற, தகுதி உடையவர்கள் ரத்ததானம் செய்ய வேண்டும். ஒருவரின் உயிர் காக்கப்படுவதாலும், நமக்கு அதனால் இழப்பு இல்லை என்பதாலும் ஒவ்வொருவரும் ரத்ததானம் செய்யலாம்.

No comments:

Post a Comment