Thursday, May 16, 2013

காலை ட்விட்டர் Satheesh Kumar saysatheesh


இன்று காலை ட்விட்டர் ஓப்பன் செய்தவுடன் கண்ணில் பட்டது ஒரு ட்வீட். அது அப்படி என் கண்ணில் படாமலேயே இருந்திருக்கலாம் என தோன்றுகிறது இப்போது!

நான் மிகவும் மதிக்கும் மரியாதை வைத்திருக்கும் மூன்று சக ட்விட்டர்கள் அவர்களுக்குள் வழக்கம்போல பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு அருமை நண்பர் அவர்களிடம் “மற்றவர்களுக்கு சுவாரசியம் ஏற்படுத்தக்கூடிய ட்விட்டுக்களை டைம்லைனில் பேசுங்கள். மற்றவற்றை தனி செய்தியில் பேசுங்கள்” என நெறிப்படுத்திக்கொண்டிருந்தார். அவரது அந்த ட்விட் எனக்குள் எழுப்பிய கேள்விகளை விட கோபங்களே அதிகம். அதன் விளைவாக சிற்சில ஆதங்க ட்வீட்டுக்களை நானிட, என்னை பிலு பிலுவென பிடித்துக்கொண்டார்கள் என் நண்பர்கள்.

நான் ஒரு வகையில் பாக்கியவான். என்னையும், எனது மன உணர்வையும் சரியாக புரிந்துகொண்ட பற்பல ட்விட்டர்களை நண்பர்களை கொண்டிருக்கிறேன். அதனால் அவர்கள் யாரும் என்னை விமர்சிக்கவில்லை. என்னை புரிந்துகொள்ளாத, புரிந்துகொள்ள முயலாத சிலரின் விமர்சனக்கணைகளுக்கு தனித்தனியாக பதில்சொல்லிக்கொண்டிருக்க முடியாத நிலையில் (ஆபீஸ் அவஸ்தை!) இந்த ட்விட் லாங்கர் அவசியமாயிற்று! (இது தான் பின் கதை சுருக்கம்!)

“யாரோ எதுவோ சொல்லிவிட்டு போகட்டுமே சதீஷா! உனக்கென்ன?” என கேட்பவர்களுக்கு, இன்று யாரோவாக இருக்கும் பாதிக்கப்பட்ட நபர் நாளை நீங்களாகவோ, நானாகவோ, நமது மற்றுமொரு நண்பராகவோ கூட இருக்கக்கூடும் என்பதால், இது போன்ற எதேச்சதிகாரங்களை ஆரம்பத்திலேயே கண்டிக்கவேண்டியதாகிறது என்பதே எனது நிலைப்பாடு.

“அவர் சொல்வது சரிதானே? சுவாரசியமற்ற விவாதங்களை ஏன் டைம்லைனில் செய்யவேண்டும்? அதற்கு தான் தனி செய்தி இருக்கிறதே” என கேட்கும் அதி புத்திசாலிகளுக்கு தான் விரிவாக பதிலளிக்கவேண்டியதாகிறது.

இன்றைக்கு திடீரென (அவரது வார்த்தையில் சொல்வதானால்) ‘டிவிட்டர் காலாசார’த்தை கட்டி காக்க எழுந்தருளியிருக்கும் அந்த அருமை நண்பரும் எனது மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவர் தான். இதே தமிழ் ட்விட்டர்களில் ஒரு குழு எப்போதுமே விதண்டாவாதத்துக்காக செயல்பட்டுக்கொண்டிருப்பதை நாம் அறிவோம். அவர்களில் யாரேனும் அப்படியான செயலில் ஈடுபட்டிருந்தால் இங்கு எல்லோரும் செய்வதை போல நானும் புறக்கணித்திருப்பேன் (துஷ்டனை கண்டால் தூர விலகு டைப்பில்). ஆனால் என் மிகவும் மதிப்புக்குரிய நபரே அப்படி ‘இறங்கிவிடும்’பொழுது அதனை சுட்டிக்காட்டவேண்டியது அவசியம் தானே?
யாரோ இருவர் என்னவோ பேசிக்கொண்டிருந்தால் யாருக்கு என்ன? யாரும் யாருடனும் தனி அரட்டை நடத்தக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கும் அளவுக்கு இங்கு யாருக்கும் அதிகாரமும் இல்லை, அதற்கான தகுதியும் இல்லை.
அநாகரீக சொற்கள், வன்முறை, ஆபாசம், வக்கிரம், இரட்டை வசனம், திரிபு, வரலாற்று பொய்கள், கற்பனை, வதந்தி என படு கேவலமான விஷயங்கள் நம் டைம்லைனை ‘அலங்கரித்து’க்கொண்டிருக்கும்போதெல்லாம் யாரும் ட்விட்டர் காவலராக அவதாரம் எடுத்து ‘ட்விட்டர் கலாசார’த்தை காக்க முற்பட்டதில்லையே? (அப்படி ‘எல்லா தவறுகளையும்’ கண்டித்திருந்தால், ஒருவேளை நானும் அவரது கண்டிப்பை சரி என ஒப்புக்கொண்டிருக்கக்கூடும்)

இப்போது யாரோ சில எளியவர்கள் ‘பேசி’க்கொண்டிருக்கையில் மட்டும் உட்புகுந்து ‘இதெல்லாம் தனி செய்தியில் பேசிக்கொள்ளுங்கள்’ என கட்டளையிட என்ன அவசியம் ஏற்பட்டிருக்கிறது? அப்படி கட்டளையிடவும், ட்விட்டர் கலாச்சாராத்தை வகுக்கவும், அதனை காப்பாற்றவும் யார் இவர்களை அதிகாரம் வழங்கி நியமித்தார்கள்? என்றெல்லாம் சில கேள்விகள் ஒரு புறம்!

இப்போது திடீர் அவதாரம் எடுத்திருப்போர், இந்த ட்விட்டர் கலாச்சாரத்தை அனைவருக்கும் உறுதிப்படுத்துகிறார்களா அல்லது எளியோருக்கு மட்டும் தான் இந்த கட்டுப்பாடா? வக்கிரமும், வன்மமும், ஆபாசமுமாக பேசுவோர்களை கண்டும் கணாமல் இருந்து கைதட்டி ஆர்ப்பரித்துக்கொண்டிருப்பதும் ட்விட்டர் கலாச்சார காவலில் வராதா என்கிற சில கேள்விகள் மறு புறம்!

இதற்கிடையில் அவரது பொழிப்புரையில் சொன்னபடி ‘மற்றவர்களுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்தும்’ கீச்சுக்களுக்கு தான் டைம்லைனில் அனுமதி எனில், வம்பிழுப்பது, பெண்களை குறித்தும், அரசியல்/அரசியல் தலைவர்கள் குறித்தும் வதந்தியும்/புனையுரையும் இட்டுக்கட்டிய கதைகளும் சொல்வது ஆகியவை தான் ட்விட்டர் கலாச்சாரத்தின்படியான ‘சுவாரசியம்’ ஏற்படுத்தும் விவாதங்களா என்கிற கேள்வி வேறு புதிதாக முளைத்தெழுகிறது.

எட்டாயிரத்து சொச்சம் தமிழ் ட்விட்டர்கள் இருக்கும் பரந்த இணையவெளியில் 27 பேர் ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தி மொத்த தமிழகத்தின் பிரதிநிதி தாங்கள் தான் என சொல்லி எல்லாரையும் அதிகாரம் செய்வது, மிரட்டுவது, கட்டுப்படுத்துவது, கட்டுப்படாதவர்கள் குறித்து ஆபாசமாக பேசுவது போன்றவற்றை செய்து வருவது சரியானதாக படவில்லை.

அவரவர்க்கென்று இங்கே உரிய வெளி இருக்கிறது. யாரும் யாருடனும் எதை குறித்தும் பேச சுதந்திரம் இருக்கிறது. எந்த ஒரு தனி நபருக்கும் குழுவுக்கும் யாரும் அடிமைப்பட்டு நடக்கவேண்டும் என்கிற நிலை இங்கே இல்லை. அப்படி இருக்க, எப்படி மிக மிக சிலருக்கு மட்டும் எதேச்சதிகார தொனி தொற்றிக்கொள்கிறது என்பது தான் புரிபடவில்லை.

இனியேனும், ட்விட்டர்கள் தங்கள் கல்வியையும் அதன் பயனாக கிடைத்த சுய சிந்தனையையும் பயன்படுத்தி, அனைவரிடத்திலும் நல்லபடியாக நடந்துகொள்ளவேண்டும் என்கிற ‘பேராசை’யில் தான் எனது இன்றைய ட்விட்டுக்கள் வெளியாகின, என்கிற தன்னிலை விளக்கத்துடன் அமைகிறேன்!

நன்றி

அன்பன்
சதீஷ் குமார்.

No comments:

Post a Comment