Wednesday, May 15, 2013

பரிசல்காரன் iParisal TwitLonger


பெண்கள் இணையவெளியில் பாதுகாப்பற்ற தன்மையை உணர்கிறார்களா’ என்று கேட்டால் ஆம் என்றுதான் சொல்ல வேண்டும்.

மெகா ட்வீட் அப்பிற்குப் பிறகு இரு நாட்களாக இந்தக் கேள்வி என்னைக் குடைந்து கொண்டிருக்கிறது. ஒரு நண்பரை, சக இணையப்பயனாளியை ‘இவன் பாதுகாப்பானவன்’ என்று நம்பிச் சந்திக்கும் தோழிகள் பலரையும் எனக்குத் தெரியும். ஆனால் ஒரு பொது நிகழ்வென்றால் வர இவர்கள் தயங்குவதற்கு நேரடியாகவோ - மறைமுகமாகவோ ஆண்கள்தான் காரணமா?

என்னதான், ‘ஆண்களுக்குப் பெண் சரிநிகர் சமானம், நாங்களும் உங்களுக்கொன்றும் சளைத்தவர்கள் அல்ல’ என்று பேசும், இயல்பிலேயே அவ்வாறு இருக்கும் பெண்களில் ஒருவர்கூடவா ட்விட் அப்பிற்கு வரமுடியவில்லை?

தோழர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது சொன்னார்: “அவங்க பயப்படறது 100% கரெக்ட்தான் பரிசல்” என்றார். ஆம். இன்னும் அவங்களுக்கு அந்த பாதுகாப்பான உணர்வை - Secured Feeling - நாம் தரவில்லை.

இந்த ட்வீட் அப் என்ற ஒரு நிகழ்விற்காக மட்டும் சொல்லவில்லை. அந்த ட்வீட் அப்பில் கலந்து கொண்ட ஒவ்வொருவரையும் நல்ல நண்பனாக பாவிக்கும் ஒரு பெண்நட்பு கண்டிப்பாக இருக்கும். ஆனாலும், ‘யார் யாரோ வரலாம். நமக்கெதுக்கு?’ என்று அவர்கள் வராமல் இருந்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கான அந்தப் பாதுகாப்பு உணர்வைத் தரவேண்டியது யார்.. எப்படி?

‘அத்தனை பேர் வர்ற இடத்துல யாரும் ஃபோட்டோ எடுக்கலாம்.. அதான்..’ என்று இவர்கள் சொல்வார்களானால்...

இதுவே ஒரு சந்திப்பு மீடியா ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதென்றால் வரத் தயாராக இருக்கிறார்களே.. அதெப்படி? அங்கே இவர்களுக்கு அந்தப் பாதுகாப்பு உணர்வு எப்படி கிட்டுகிறது?

‘சைட் அடிப்பாங்க, கமெண்ட் அடிப்பாங்க’ என்கிறீர்களா? சென்னை ட்விட் அப்பில் அமாஸ் அம்மா, சோனியா உட்பட ஏழெட்டு பேர் கலந்து கொண்டார்கள். அவர்கள்தான் சொல்ல வேண்டும். ஏதும் தரக்குறைவாய் நடத்தினோமா? ஏன்.. திருச்சியிலிருந்து, ரியல்ரேணு கூட வந்திருந்தார். ஆனால், டைம்லைனில் சக மனுஷியாய் பலரையும் கலாய்க்கும் ஒரு பெண்கூட கோவை ட்விட் அப்பிற்கு வரவில்லை.

ட்விட் அப் ஃபோட்டோவைப் போட்டதுமே கிண்டலான கமெண்ட்ஸ் தோழிகளிடமிருந்து வருவது மகிழ்வாக இருக்கிறது. நாங்களும் ரசிக்கிறோம்.. பேசுகிறோம்.. ஆனால் நேரில் வர மட்டும் தயக்கம் ஏன்?

சௌமி, அரட்டைகேர்ள் சௌம்யா போன்ற முகம்காட்ட விரும்பாதவர்களை விட்டுவிடலாம். ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலேயோ முகம் காட்டும் தோழிகள்கூட வராதது ஏன்? எங்கே தவறு?

”ட்வீட் அப்ல பொண்ணுக வராததுதான் உன் ப்ரச்சினையா?” என்றால்...

ஆம். பாலியல் சம்பவங்களையெல்லாம் படிக்க நேர்கையில் “ஏஏஏஏய்ய்ய்.. பெண்ணுக்குப் பாதுகாப்பில்லைடா” என்று போராளிக் குரல் கொடுக்கிறோம். இந்த மாதிரி ஒரு பொது நிகழ்வுக்கு, தெரிந்த நண்பர்களையே சந்திக்க வரத் தயங்குமளவுதான் பெண்களை நாம் வைத்திருக்கிறோம். அதை உடைக்க வேண்டாமா? அதை ட்வீட் அப்பில் நிகழ்த்திக் காட்டுவோமே... ‘பாருங்கடா.. வருஷா வருஷம் வர்றாங்க. மரியாதையாத்தான் நடத்தறோம்’ என்று காட்டுவோமே.. மாற்றம் ஒரு புள்ளியிலிருந்து தொடங்கட்டுமே..

உடனே பொங்காமல் - நிதானமாக இதைப் பற்றி விவாதியுங்கள்... ப்ளீஸ்...

No comments:

Post a Comment