Wednesday, June 25, 2014

கிராமத்தை நோக்கி


anbudan BALA · @AmmU_MaanU

 25th Jun 2014 from TwitLonger http://www.twitlonger.com/show/n_1s28h8t


மாற்று பொருளாதாரத்தை கட்டி எழுப்புவோம்... 
(சிந்தனையை தூண்டும் கட்டுரை... ஸ்டார்ட் மீஜிக் :))

வெகுநாட்களாக எழுத எண்ணிய கட்டுரை, வழக்கமான சோம்பேறித்தனத்தினால் தள்ளிப் போய் கொண்டே இருந்தது. இன்று தான் ஒரு வடிவம் கிடைத்துள்ளது. இது வழக்கமான நம் சந்தை பொருளாதாரத்தை குறித்த புலம்பல்களோ, மையப்படுத்தப்பட்ட பொருளாதாரம் ஏற்படுத்திய சீர்கேடுகளை விளக்கும் கட்டுரையோ அல்ல. அதன் அவலங்களை நித்தமும் தினம் அனுபவிப்பதால, அது குறித்த எந்த விளக்குமும் தேவை இல்லை என்றே எண்ணுகிறேன்.
சரி. கட்டுரைக்குள் நுழைவதற்கு முன் உங்கள் கற்பனை குதிரையை கொஞ்சம் தட்டிவிடுங்கள்.

இப்போது நீங்கள் ஒரு சிறு கிராமத்தில் வசிக்கிறீர்கள் . அந்த கிராமத்தில் இருபத்தைந்து வீடுகளே உள்ளது. குழந்தைகள், முதியவர்களென சற்றொப்ப நூற்றிருபது பேர் வசிக்கிறீர்கள். கிராமதிற்கென்று பொதுவாக எழுபது ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. நான்கு குளம் உள்ளது. நிலத்தில்சிறுதானியங்கள், அரிசி, காய்கறி, பருத்தி பயிரிடுகிறீர்கள். பாசனத்திற்கு குளத்திலிருந்து தண்ணிர் பெறுகிறீர்கள். ஆண்கள் வேளாண் மை மற்றும் மண்பாண்டங்கள் செய்ய என வேலையைப்பிரித்து கொள்ள, பெண்கள் கால்நடைகளை பராமரிக்க மற்றும் பருத்தியிலிருந்து ஆடை நெய்கிறார்கள். பெரியவர்கள் மரபு மருத்துவம் பார்க்கிறார்கள். 

கிராமதிற்கென்று பொதுவாக ஒரு தானிய குதிர் இருக்கிறது அதில் அறுவடையான தானியங்களை சேர்த்து வைக்கிறீர்கள். ஊரில் குளமும் பொதுவாக உள்ளதால், தேவைப்படுவோர் மீன் பிடித்து கொள்கிறார்கள். குழந்தைகளுக்கென சிறு பள்ளி உள்ளது அதில் மொழி, வேளாண்மை, மண் பாண்டங்கள் செய்வது, ஆடை நெய்வது கற்றுதரப்படுகிறது. சிறு குழுவாக (small clan) வசிப்பதால், உற்பத்திக்க்காக செலவிடும் நேரம் போக , நிறைய நேரம் மிஞ்சுகிறது. பறை, கூத்து வளர்கிறது. குறிப்பாக ஒரு குழுவில் அனைத்து வேலைகளும் பகிரிந்து கொள்ளும் போது சாதி ஒழிகிறது.

இங்கு பணம் தேவைப்படவில்லை, இயற்கையை சுரண்டவில்லை, பொருட்கள் நாம் வசிக்கும் இடத்திலேயே உற்பத்தி செய்ய படுவதால் போக்குவரத்து மிச்சமாகிறது. அதனால் பெட்ரோல் போன்ற புதுபிக்கஇயலாத (non-renewable energy) காக்கப்படுகிறது. வேலைக்குறித்த அச்சமோ, கடன் குறித்த கவலையோ இல்லை. உடல் உழைப்பே பிரதானமாக இருப்பதால், இரத்த கொதிப்போ, சர்க்கரை நோயோ வர வாய்ப்பில்லை.

சரி எதார்த்ததிற்கு வருவோம்.

நீங்கள் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள். உங்கள் பெற்றோர்கள், உறவினர்களை விட்டு தள்ளி ஒரு பெருநகரத்தில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு மாதம் ஐம்பாதயிரம் சம்பளம். மாதம் பத்தாயிரம் வீட்டு வாடகைக்கோ அல்லது வீட்டு கடனுக்கோ செலவிடுகிறீர்கள். பத்தாயிரம் உணவு பொருட்கள், எட்டாயிரம் வாகன எரிப்பொருள், கைப்பேசி, இணையக்கட்டணம்,எழாயிரம் மருத்துவம், உடற்பயிற்சி, பொழுதுப்போக்கு, மூவாயிரம் பள்ளிக்ககட்டணம், ஏழாயிரம் சேமிப்பு, ஐந்தாயிரம் கிராமத்தில் வசிக்கும் உங்கள் பெற்றோருக்கு. (இது சென்னையில் வசிக்கும் நண்பன் கொடுத்த அவன் வீட்டு கணக்கு. இது அனைவருக்கும் பொருந்துமென நினைக்கிறேன்)

இதில், நீங்கள் நேரடியாக உங்களுக்கான எந்த உற்பத்தியிலும் நீங்கள் ஈடுப்படவில்லை. ஒரு நிறுவனத்திற்காக உழைக்கிறீர்கள். உங்கள் கற்பனை திறனுக்கு பெரிதாக வேலை இல்லை, அந்த நிறுவனத்திற்கு எது தேவையோ அதை மட்டுமே நீங்கள் சிந்திக்க வேண்டும். உடல் உழைப்பு இல்லாமல் போகிறது. நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது. உங்கள் வேலை தனிப்பட்ட முறையில் உங்களுக்கு நேரடியாக எந்த மகிழ்ச்சியையும் தருவதில்லை. அதனால், உங்களை புதுபித்துக்கொள்ள, பொழுதுபோக்கை வாழ்கைக்கு வெளியே பப்புகளிலும், மனமகிழ் மன்றங்கள் (recreation club), தீம் பார்க்குகளிலும் மகிழ்ச்சியை தேடுகிறீர்கள். உங்கள் பெரும்பாலான நேரங்கள் project, deadline என்றே கழிவதால் உங்கள் குடும்பத்திற்குள் இடைவெளி அதிகரிக்கிறது. உங்கள் ஒரு வயது குழந்தையுடன் நேரம் செலவிட முடியாமல் play schoolலில் சேர்கிறீர்கள்.
சுருக்கமாக, இதில் நோய், குடும்ப சூழல் கெடுதல், கற்பனை திறன் அழிதல் நேர்கிறது.

சரி... இரண்டையும் ஒப்பிட்டாகிவிட்டது. சொல்ல வரும் பொருள் என்ன...? அனைவரையும் கிராமத்தை நோக்கி செல்ல சொல்கிறீர்களா...? என்ற வினா உங்கள் மனதில் எழுந்தால். நிச்சயம் ஆமாம் என்பதே பதில். ஆனால் அனைவராலும் உடனே முடியாதென்பதை நானறிவேன். ஓடுகிற பேருந்திலிருந்து எதிர் திசையில் நீங்கள் இறங்கினீர்கள் என்றால் காயம் மட்டுமே மிஞ்சும் என்பதே எதார்த்தம்.

சரி தீர்வு... நாம் நிலைகளை நோக்கி திரும்புதல் என்ற முடிவை முதலில் எடுப்போம். பெரு நிறுவனங்களின் பொருட்களை முதலில் புறகணிப்போம். மாத தேவைகளை குடும்பத்துடன் அமர்ந்து பட்ஜெட் போடுவோம். 

முதலில் அடிப்படை பிரச்சனைகளை பார்ப்போம்.
நகரத்தில் இருபது குடும்பங்கள் சேர்ந்த குழுவை உண்டாக்குதல். அந்த குழு முதலில் கிராம விவசாயிகளிடம் நேரடி தொடர்பை ஏற்படுத்துதல். அந்த இருபது குடும்பத்திற்கு தேவையான அரிசி, தானியம், மளிகை பொருட்கள் எந்த இடைதரகரும் இல்லாமல் நேரடியாக விவசாயிடமிருந்து பெறுவது. (பெருநகரங்களுக்கு எல்லா ஊர்களிலிருந்தும் பேருந்து வசதி இருப்பதால், பேருந்தில் சரக்கை போட்டுவிட்டால் பொருட்கள் நகரங்களை ஓரிரவில் சென்று சேர்ந்துவிடும்), ஆடைகளை கூடுமான வரையில் துணிகளாக எடுத்து தையற்காரரிடம் தைக்க கொடுத்தல் (ஆர்கானிக் துணிகள் இப்போது பாமயன் போன்றவர்களிடம் கிடைக்கிறது).

இனி, கல்வி, சுகாதாரம்.
கல்வி: அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்போம். குடிமக்களுக்கு கல்வி கொடுக்க வேண்டியது அரசின் கடமை. நீங்கள் உங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் போது, அரசின் கடமை என்பதை நீங்களே மறுக்கிறீர்கள். நீங்கள் தனியார் பள்ளியில் செலவழிக்கும் தொகையை அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த நீங்கள் செலவிடலாம்.

சுகாதாரம்: இந்திய அரசு, அலோபதி மருத்துவம் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவம் என அறிவிக்கவில்லை. சித்தா, ஆயுர்வேதம், யுனானி, தொடு சிகிச்சை என எத்தனயோ மருத்துவமுறைகள் உள்ளது. அதை நாம் பயன்படுத்துதல். நீங்கள் மாற்று மருத்துவத்தை நாடும் போது, அலோபதியின் மருந்து ஊழல்களுக்கு எதிரான போராட்டத்தில் உங்களை அறியாமல் நீங்களே பங்குபெறுகிறீர்கள்.
மேலும், நீங்கள் உங்களுக்குள் ஒரு குழு ஏற்படுத்தும் போது உங்களுக்குள் ஒரு இணக்கம் ஏற்படுகிறது. நகரமயமான வாழ்வில் பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்றே தெரியாமல் தனி தீவாக வாழும் மனிதர்களிடம் ஒரு இணக்கம் ஏற்படுகிறது. அறிவு பரிமாற்றம் நிகழ்கிறது.
நாம், இவ்வாழ்வியல் வழியில் பயணிக்கும் போது பணம் மிச்சமாகிறது உங்கள் சேமிப்பு அதிகரிக்கிறது. உங்கள் சேமிப்பிலிருந்து, நீங்கள் இருபது பேரும் சேர்ந்து கிராமத்தில் நிலம் வாங்குகள் அதிகமல்ல, நபருக்கு இரண்டு ஏக்கர்.

(நீங்கள் நிலம் வாங்கும் போது போட்டி சந்தையை உண்டாக்கி அதிக விலை கொடுத்து வாங்க கூடாது. விவசாயம் நடந்து கொண்டிருக்கும் இடத்தை வாங்க கூடாது. கைவிடப்பட்ட இடமாக இருத்தல் வேண்டும்.)
இப்போது இடம் வாங்கியாகிவிட்டது. இப்போது அப்படியே கட்டுரையின் முகப்பில் உள்ள கற்பனையை நிஜமாக்குங்கள்.
இது மட்டுமே இப்பூவுலகை காக்க ஒரே தீர்வு.

இது கட்டுரையாக எழுதுவது மிக சுலபம். அதை நம் வாழ்வியல் முறையாக மாற்றுவது தான் உன்னதம்.
வாருங்கள் உன்னதத்தை நோக்கி கரம் கோர்த்து பயணிப்போம். நம் குழந்தைகளும் வசிக்க இப்பூவுலகு மிச்சம் இருக்க வேண்டுமென்றால் இது மட்டுமே ஒரே தீர்வு.

- மு. நியாஸ் அகமது, ஒருங்கிணைப்பாளர், ஐந்திணை வாழ்வியல் நடுவம்.


No comments:

Post a Comment